1 கோடி! 2 கோடி!! கட்சி தலைவர்கள் ஏலம்.. மாணவியின் மரணத்தில் அரசியல் வேண்டாம் - மாசு

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தொடக்கம்

1 கோடி! 2 கோடி!! கட்சி தலைவர்கள் ஏலம்.. மாணவியின் மரணத்தில் அரசியல் வேண்டாம் - மாசு

உயிர் கொன்ற மருத்துவம்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனையான பிரியா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற போது முழங்காலில் வலி ஏற்பட்டதால் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரியாவிற்கு மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மூலம் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தவறான அறுவை சிகிச்சையால் உடல்நிலை மோசமடைந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவிற்கு முழங்கால் பகுதி அகற்றப்பட்டது.

பின்னர் திடீரென பிரியாவின் உடல்நிலை கவலைக்கிடமானதால், கடந்த நவ.14 ஆம் தேதி பிரியா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கால்பந்தாட்ட வீராங்கனையான மாணவி பிரியா சிகிச்சை பலனின்றி நவ.15 ஆம் தேதி காலை  உயிரிழந்தார்.

மாணவி மரணம் - இழப்பீடு கோரும் கட்சி தலைவர்கள் 

மாணவி பிரியா மருத்துவர்களின் பிழையால் உயிர் இழந்ததையடுத்து அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை, உட்பட பல்வேறு தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாணவியின் மரணத்தை ஏலமிடுவதைப் போல ஒரு கோடி இரண்டு கோடியென இழப்பீடு தொகையை உயர்த்தி வருகின்றனர் அரசியல் கட்சி தலைவர்கள்.

தமிழ்நாடு அரசிற்கு ஈ.பி.எஸ். கோரிக்கை

கால்பந்தாட்ட வீராங்கணைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இந்த அரசாங்கம் பிரியா குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி  இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல, அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

மாணவியின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது - டிடிவி 

தவறான சிகிச்சையால் இளம் கால்பந்தாட்ட வீராங்கனை மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

ரூ.2 கோடி இழப்பீடு வேண்டும் - அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், சகோதரி பிரியாவின் மரணம் வேதனை அளிக்கிறது, அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், தமிழ்நாடு அரசு சகோதரி பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பயணிகளிடம் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும் - போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

மாணவியின் மரணத்திற் அரசியல் ஆக்க வேண்டாம் - அமைச்சர் மாசு

மாணவியின் மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு, தவறான சிகிச்சையளித்து மாணவியின் மரணத்திற்கு காரணமான மருத்துவர்களுக்கு தகுந்த தந்வதனை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கால்பந்தாட்ட  வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு  இழப்பீடாக ரூ.10 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் என்று கூறினார்.

இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு அரசு 

உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் தாயார் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பிரியாவின் குடும்பத்திற்கு வீடு வழங்க முடிவெடுத்துள்ளது. பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இழப்பீடாக ரூ.10 லட்சம் அறிவித்திருந்த நிலையில், இன்று புதியதாக ஒரு வீடும், கூடுதலாக ரூ.5 லட்சமும் பிரியாவின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

- அறிவுமதி அன்பரசன்