இனி அடிக்கடி கரண்ட் கட்டாகும்: தமிழகத்தில் மின்துறையால்  அரசுக்கு ரூ. 13,176 கோடி இழப்பு

தமிழ்நாட்டில் மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19ம் ஆண்டில் அரசுக்கு, 13 ஆயிரத்து 176 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

இனி அடிக்கடி கரண்ட் கட்டாகும்: தமிழகத்தில் மின்துறையால்  அரசுக்கு ரூ. 13,176 கோடி இழப்பு

தமிழ்நாட்டில் மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19ம் ஆண்டில் அரசுக்கு, 13 ஆயிரத்து 176 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

 இதுதொடர்பாக, இந்திய தணிக்கை துறையின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் டான்டிரான்ஸ்கோ ஆகிய மின்துறை நிறுவனங்கள் 13 ஆயிரத்து 259 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில், டி.என். பவர்பின் என்ற நிறுவனம் மட்டும் 83 கோடியே 20 லட்சம் லாபம் ஈட்டியதால், 13 ஆயிரத்து 176 கோடி ஒட்டுமொத்தமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டான்ஜெட்கோவில் இழப்பு அதிகரித்ததற்கு மின் கொள்முதல் மற்றும் உற்பத்திச் செலவோடு பணியாளர் மற்றும் நிதிச் செலவினங்கள் அதிகரிப்பே முக்கிய காரணம் என்றும், 2018-19-ம் ஆண்டின் வருவாய் 2 ஆயிரத்து 533 கோடி ரூபாயாக அதிகரித்தாலும், கூடுதல் செலவும் 7 ஆயிரத்து 396 கோடியாக உயர்ந்துள்ளது.

ரெயில் சரக்குப் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு நிலக்கரியை ஏற்றாமல் விட்டதால், 101 கோடியே 35 லட்சம் ரூபாய் சரக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதிருந்ததாகவும்,தரம் குறைந்த நிலக்கரியினால் 171 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள 844 எம்.யு. மின் உற்பத்தி இழப்பை டான்ஜெட்கோ சந்தித்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டில் டான்ஜெட்கோ ரூ.370.61 கோடி உபரி எதிர்பார்த்த நிலையில், ரூ.12 ஆயிரத்து 623.41 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்த இந்திய தணிக்கை துறை, நிலக்கரி மேலாண்மையில் செயல்திறனின்மையை களைய டான்ஜெட்கோ தகுந்த நடவடிக்கைகளை எடுக்காததால், கூடுதல் செலவீனம் ஏற்பட்டு நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

 ஒழுங்குமுறை விதிகளை மீறி ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வழங்கியவர்கள் மீது பொறுப்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், விநியோக வட்டாரங்களில் ஆய்வு செய்து விதிமீறல்களை கண்டறிந்து வருவாய் இழப்பை தடுக்க வேண்டும் என்றும் இந்திய தணிக்கை துறை அறிவுறுத்தியுள்ளது.