பொன்முடியிடம் கேள்வி எழுப்பிய சபாநாயகர்...சிரித்துக்கொண்டே பதிலளித்த அமைச்சர்!

பொன்முடியிடம் கேள்வி எழுப்பிய சபாநாயகர்...சிரித்துக்கொண்டே பதிலளித்த அமைச்சர்!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3ம் நாளாக இன்று கூடிய நிலையில், கீழடி அருங்காட்சியப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் பொன்முடி உறுதியளித்துள்ளார். 

3ஆம் நாள் கூட்டத்தொடர்:

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையில் இருந்த பல்வேறு வார்த்தைகளை தவிர்த்து பேசியதால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று, இரங்கல் குறிப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் 3ம் நாள் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது.

கருப்பு சட்டையில் வந்த ஈபிஎஸ்:

இந்நிலையில், எதிர்கட்சித்துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சென்றனர். பின்னர் ஓ.பன்னீர் செல்வம் அருகே அமராத ஈபிஎஸ் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை.

கேள்வி நேரம்:

இதனிடையே, பேரவை கூடியதும் மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் புருஷோத்தமன் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது திண்டிவனம் மரக்காணத்தில் துணைக்கருவூலம் அமைக்கப்படுமா? என எம்எல்ஏ அர்ஜுனன் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் நிதிநிலைமை, செயல்பாடு தன்மையைப் பொறுத்து திட்டத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க: தமிழ்நாடு, தமிழ்மொழி...இரண்டையும் காப்பாற்றுவதற்கு எஞ்சி இருக்கும் ஒரே தலைவர்...அமைச்சர் சொல்வது என்ன?

ஆர்.பி. உதயகுமார் கேள்விக்கு பதிலளித்த கே.என்.நேரு:

தொடர்ந்து, திருமங்கலத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டுமென, அத்தொகுதியின் எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மதுரை, கோவை, சென்னையில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும்,  அதேபோல், மதுரையில் 500 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். 

கேள்வி எழுப்பிய அப்பாவு:

இதைத்தொடர்ந்து கொடைக்கானலில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துக்கொண்டிருந்தபோது, 31 கல்லூரிகள் தொடங்கப்பட்ட போதும் தனது தொகுதியில் ஒரு கல்லூரி கூடத் தொடங்கவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த அமைச்சர், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கல்லூரி தொடங்குவது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்படும் என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இதையடுத்து கீழடி அருங்காட்சியக பணிகள் தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி, பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், முதலமைச்சர் ஒப்புதல் கிடைத்தவுடன் அருங்காட்சியகம் திறக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்தார்.

எ.வ.வேலுவின் பதில்:

செங்கம் - வேலூரை இணைக்கும் புறவழிச்சாலை அமைப்பு தொடர்பாக பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.