கருணாநிதி - ஜெயலலிதா சிலை அகற்றம்...பரபரப்பான சூழலில் போலீசார் குவிப்பு!

கருணாநிதி - ஜெயலலிதா சிலை அகற்றம்...பரபரப்பான சூழலில் போலீசார் குவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி , ஜெயலலிதா அவர்களின் சிலையை வருவாய்த் துறையினர் போலீசாரின் பலத்த பாதுக்காப்புடன் அகற்றியதால்,  அந்தப்பகுதியில்  திமுக, அதிமுக  இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி உள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் சிலை வைப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தொழுவந்தாங்கல் கிராமத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதன்முதலில் எம்.ஜி.ஆர் சிலை வைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அதே பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிமெண்ட் உருவ சிலையை திமுகவினர் வைத்தனர். இதனைத்தொடந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் சிலையை அதிமுகவினர் வைத்தனர்.

ஜெயலலிதாவின் சிலை அகற்றம்:

எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே வைத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை முறையாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளதாக கூறி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வருவாய் துறையினர் புகாரின் பேரில் நேற்று இரவு ஜெயலலிதா சிலை போலீசாரின் மூலம் அகற்றப்பட்டது.

எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அதிமுக:

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவின் மாவட்ட செயலாளர் குமரகுரு, கள்ளக்குறிச்ச சட்டமன்ற உறுப்பினர் செந்திகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் இரவு முழுவதும் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதேபோன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை அகற்ற வேண்டும் என்றும் அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர்.

கருணாதிதி சிலை அகற்றம்:

தகவல் அறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையிலான வருவாய்த் துறையினர், காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் மறைந்த கருணாநிதி அவர்களின் சிலையையும்  அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் கருணாநிதியின் சிலையை எடுத்த செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, எம்.ஜி.ஆர் சிலையையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் காராணமாக அந்தப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 

இருதரப்பினரிடையும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போலீசார்:

பின்னர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், முறையாக அனுமதி பெற்று தலைவர்களின் சிலையை வைக்க வேண்டும் எனக் கூறியதோடு, தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக அப்பகுதி முழுவதும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.