அதிமுக ஒரு தொடர்வண்டி...யாருக்காவும் நிற்காது...மறைமுகமாக சாடும் வைகைசெல்வன்...!

அதிமுக ஒரு தொடர்வண்டி...யாருக்காவும் நிற்காது...மறைமுகமாக சாடும் வைகைசெல்வன்...!

அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவில், அண்ணா திமுகவை தலைமை ஏற்பவர்கள் திமுகவை எதிர்ப்பவராக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஓபிஎஸை தாக்கி அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியுள்ளார்.

அதிமுக அதிகார போட்டி:

அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே அதிகாரப்போட்டி உச்சத்தை தொட்டுள்ளது. அதிமுக தலைமை யாருக்கு என்பதில் ஈபிஎஸ்க்கும் , ஓபிஎஸ்க்கும் கடும்போட்டி நிலவி வருகிறது. இதில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்தெடுக்கப்பட்டது உறுதியானது. 

ஓபிஎஸ் மேல்முறையீடு:

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்பதற்காக ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 

ஓபிஎஸை குற்றம் சாட்டும் ஈபிஎஸ்:

இப்படி மாறி மாறி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும்  மோதி கொள்கின்றனர். ஆனால், இதில் ஈபிஎஸ் ஆளும்கட்சியான திமுகவை எதிர்த்து தாங்கள் எதிர்கட்சி என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். அதேசமயம், அதிமுகவை சேர்ந்தவர் என்று கூறும் ஓபிஎஸ் எதிர்க்கட்சியான திமுகவை ஆதரித்து பேசுவது அவரது செயல்களில் வெளிப்படையாக தெரிவதாக ஈபிஎஸ் குற்றம் சாட்டி வருகிறார். இப்படி ஆளும் கட்சியை ஆதரிப்பவர் எப்படி அதிமுகவை சேர்ந்தவராக இருக்க முடியும் என்றும் ஈபிஎஸ் கேள்வி எழுப்பி வருகிறார். இந்நிலையில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவில், அண்ணா திமுகவை தலைமை ஏற்பவர்கள் திமுகவை எதிர்ப்பவராக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஓபிஎஸை தாக்கி அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியுள்ளார்.

ஈபிஎஸ் ஏன் தலைமை ஏற்க வேண்டும்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தஞ்சை ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமை வகித்தார். மேலும், கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகை செல்வன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், எடப்பாடி பழனிச்சாமியை தலைமை ஏற்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். ஏன் ஈபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என்றால் அவர் ஜனநாயக முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களில்  98 சதவீதம் பேரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதுமட்டுமல்லாமல், அண்ணா திமுகவை தலைமை ஏற்பவர்கள் திமுகவை எதிர்ப்பவராக இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் அதிமுகவில் எதிர்க்கட்சியாக செயல்படுவர் எடப்பாடி மட்டும்தான். அதனால் அவர் தாம் அதிமுகவில் தலைமை ஏற்க வேண்டும் என்று ஓபிஎஸ்சை தாக்கி பேசினார். 

இதையும் படிக்க: மீண்டும் எடப்பாடி கதவை தட்டும் ஓபிஎஸ் டீம்....ஈபிஎஸ் வகுக்கும் யூகம் என்ன?

அதிமுக ஒரு ரயில் போன்றது:

தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச்செல்வன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ரயில் போன்றது; இதில் யார் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம்; யாரும் வருவார்கள் என்பதற்காக ரயில் நிக்காது. அதுபோன்று கடந்த 50 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுக யாருக்காகவும் தனது பயணத்தை நிறுத்தாது; யாரும் வருவார்கள் என எதிர்பார்த்தது இல்லை; அது தன் வழியில் ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளுங்கள்; இறங்குபவர்கள் இறங்கி விடுங்கள்; யாரும் வரவில்லை எனவும் கவலைப்படுவதும் கிடையாது என்று சூசகமாக பேசியுள்ளார். இவருடைய பேச்சு அரசியல் வல்லுநர்களிடையே இவர் ஓபிஎஸ்சை தான் சாடி பேசிகிறாரா? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.