இப்படி செய்ததால்தான் நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தை சந்தித்தார்... எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியீடு!

நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது முதல் தகவல் அறிக்கை மூலம்  உறுதியாகி உள்ளது.

இப்படி செய்ததால்தான் நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தை சந்தித்தார்... எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியீடு!

ஜாம்பி, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் மண்டபம் தெருவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு நடிகை யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் ஈ.சி.ஆர் சாலையில் வேகமாக வந்த போது நிலைதடுமாறி சாலையின் தடுப்பின் மீது மோதி கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பெண் நண்பரான ஹைதரபாத்தைச் சேர்ந்த பாவணி சம்பவ இடத்திலேயே பலியானார். நடிகை யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் இரண்டு பேர் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக காரை ஓட்டி வந்தது யார்? குடிபோதையில் வாகனத்தை இயக்கினாரா? என்ற பல சந்தேகங்கள் இந்த வழக்கில் தோன்றியது.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நடிகை யாஷிகா விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவரும், யாஷிகாவின் ஆண் நண்பருமான நிரூப் நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. குறிப்பாக நடிகை யாஷிகா ஆனந்த் தனக்கு சொந்தமான காரை கடந்த 24 ஆம் தேதி மாலை எடுத்து கொண்டு  ஹைதரபாத்தைச் சேர்ந்த பாவணி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆண் நண்பரான அமீர், சையது ஆகியோருடன் மகாபலிபுரம் ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். 

பின்னர் இரவு 11 மணியளவில் யாஷிகா ஆனந்த் காரை ஓட்டியதாகவும் அருகே உள்ள சீட்டில் பவாணி மற்றும் ஆண் நண்பர்கள் இருவரும் பின்புற சீட்டில் அமர்ந்து சென்னை நோக்கி வந்துள்ளனர் எனவும் ஈ.சி.ஆர் சூளேரிக்காடு பேருந்து நிலையம் அருகே வேகமாக வந்த போது நிலைதடுமாறி தடுப்பு சுவரின் மீது கார் மோதி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த பாவணியை அருகிலிருந்த பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது  சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும், காயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் ஆண் நண்பர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் காரை ஓட்டி வந்த யாஷிகா ஆனந்த் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், மரணத்தை விளைவிக்கும் குற்றம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகன ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்திருந்தனர். மேலும் விபத்து குறித்து உடல் நிலை சீரானபின் நடிகை யாஷிகா ஆனந்திடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.