செந்தில் பாலாஜி போட்ட செம்ம ஸ்கெட்ச்!! அசால்ட்டா விழும் மெயின் விக்கெட்டுகள்

செந்தில் பாலாஜி போட்ட செம்ம ஸ்கெட்ச்!!

செந்தில் பாலாஜி போட்ட செம்ம ஸ்கெட்ச்!! அசால்ட்டா விழும் மெயின் விக்கெட்டுகள்


செந்தில்பாலாஜி.. 1995-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர், 2000-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக ஆட்சிகாலத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில், டிடிவி.தினகரன் பக்கம் நின்ற செந்தில்பாலாஜி, அப்போதைய முதலமைச்சரை மாற்றக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மனு அளித்தார். 

அதற்காக அமைச்சர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார் செந்தில்பாலாஜி. அதனையடுத்து மீண்டும் தனது தாய் கழகமான திமுகவில் தஞ்சமடைந்தார். அங்கு சென்ற உடனேயே அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. காரணம் கரூர் பகுதியில் அவருக்கு இருந்த ஆதரவு. 5-வது முறையாக கரூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக பதவியேற்றார். 

அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அதிமுகவை இனி நம்ப முடியாது என தீர்க்கமாக முடிவெடுத்து சரியான நேரத்தில் திமுகவிற்கு சென்ற அவர், அங்கு அமைச்சர் பதவியை பெற்றவுடன் அமைதியாக இல்லாமல், தனது பலத்தை நிரூபிக்க தன்னால் முடிந்தவரை அமமுகவில் உள்ளவர்களை திமுக பக்கம் இழுத்து வருகிறார். 

அதிருப்தியில் இருந்த அமமுக நெல்லை மாவட்டச் செயலாளர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரை அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தனர். இதற்கு முக்கிய பங்காற்றியவர் செந்தில்பாலாஜி. பால்ய நண்பர்களை தனிதனியே வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து உபசரித்ததுடன், ஒருத்தரை வைத்தே மற்றொருவரை கவிழ்த்தார். 

இதனை தொடர்ந்து அதிமுகவால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரும், திருப்பத்தூர் அமமுக மாவட்டச் செயலாளருமான பாலசுப்ரமணியையும் அழைத்து பேசியுள்ளார் செந்தில் பாலாஜி. அவரது சந்திப்பிற்கு பிறகு சசிகலாவிடம் பேசிய பால சுப்ரமணி, அவரது பேச்சுக்கு மறுபேச்சு பேசவில்லை எனக் கூறப்படுகிறது. 

அதேபோல, டிடிவி தினகரனின் ஆதரவாளராகவும் அமமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் உள்ள பழனியப்பனை அமமுகவில் இருந்து திமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளார் செந்தில்பாலாஜி.  ஒருவேளை பழனியப்பன் திமுக பக்கம் வந்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்துக்கே ஒரு பலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் அதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த திமுக கொங்கு மண்டலங்களில் அதிகளவில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.  

இதுகுறித்து  தருமபுரி எம்பி செந்தில்குமாரிடம் விசாரித்த போது, பழனியப்பன் திமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார். ஆக பழனியப்பனும், பால சுப்ரமணியும் திமுகவில் இணைந்து விட்டால், அமமுகவின் ஆணிவேர் சரியத் துவங்கிவிடும். 
சசிகலாவின் முயற்சிகளை காப்பாற்றுவாரா தினகரன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.