திமுகவிற்கு எதிராக ஒன்று சேர்கிறார்களா? அதிமுகவை இணைப்பதற்கு வகுக்கப்படும் அரசியல் வீயூகங்கள் என்ன?

திமுகவிற்கு எதிராக ஒன்று சேர்கிறார்களா? அதிமுகவை இணைப்பதற்கு வகுக்கப்படும் அரசியல் வீயூகங்கள் என்ன?

தமிழ்நாட்டில் அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலை என்பது பேசுபொருளாகியுள்ள ஒன்றாக உள்ளது. ஒரு உறையில் இருந்த இரு கத்திகள் தற்போது எதிர் எதிர் திசையில் கூர் திட்டி வருகிறது. திமுகவிற்கு எதிராக உள்ளவர் ஒன்றிணைந்து, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் இணைப்பதற்கான முயற்சியில் சிலர் இறங்கி உள்ளதை காண முடிகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பின் :

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் என அனைவரும் அதிமுக பிரதிநிதிகளாக அறியப்பட்டனர். சில காரணங்களுக்காக சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து வெளியேற்றினர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலா பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து சசிகலாவை பொதுச்செயலாளர் பதிவியில் இருந்து நீக்கியதோடு, கட்சியை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

ஓபிஎஸ் vs இபிஎஸ் :

ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் அதிமுக இரண்டுபட்டு உள்ளது. அதிமுகவின் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மற்றவர்களின் ஆதரவாளர்களை நீக்குவது, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு புதிய பொறுப்புகளை உருவாக்குவது என பல வேலைகளை செய்து வருகின்றனர்.


டி.டி.வி. தினகரன் வீயூகம் :

சசிகலாவின் சொந்த சகோதரி மகனான தினகரன், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். இத்தனை ஆண்டுகளாக அதிமுக கட்சி விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் இருந்த தினகரன், சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வரும்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்புள்ளது ஆனால்எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்க்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். 

மேலும், அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவர் இபிஎஸ், அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறியிள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்காக பலவற்றை விட்டுக்கொடுத்து இருக்கிறோம் எனக் கூறி இருந்தார். அவரது இந்த பேச்சு ஓபிஎஸ் உடன் இணைவதற்கான முன்னெடுப்பை தினகரன் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் முயற்சி :

தினகரனைப் போலவே, சசிகலாவும் பல நாட்கள் அதிமுக பிரச்சனைகள் குறித்து பேசாமல் இருந்தார். தனக்கான தொண்டர்களை திரட்டுவதற்காக தமிழ்நாடு முழுவதும் பல சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அதிமுகவின் இந்த நிலைமைக்கு திமுக தான் காரணம் எனக் கூறி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரிதும் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. 

இபிஎஸ்ஸும் இதே கருத்தை தான் முதலில் இருந்து முன் வைத்து வருகிறார். இதனால் சசிகலாவின் இந்த கருத்து, இபிஎஸ்க்கு தனது ஆதரவை வெளிப்படுத்துவதற்கான முன்னெடுப்பாகவே தெரிகிறது. சசிகலா- ஓபிஎஸ் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், சசிகலா தற்போது இபிஎஸ் உடன் கைகோர்க்கப்போவது போன்ற ஒரு பிம்பம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ்ஸை இணைக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியுள்ளாரோ என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மோடி விருப்பம் :

பாஜகவின் கூட்டணி கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவு பட்ட பின்னர், அதிமுகவின் இரு தலைவர்களையும் இது வரை மோடி சந்திக்கவே இல்லை. மோடியை சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனி தனியாக முயற்சித்தும் கூட மோடி இருவரையும் இது வரை தனியாக சந்திக்கவில்லை. இதனால் மோடியும் இணைந்த அதிமுகவை தான் விரும்புகிறாரோ என்றும் விவாதங்கள் நடந்து வருகிறது. 

திமுக vs அதிமுக :

சசிகலா, தினகரன், மோடி என அனைவரும் இணைந்த அதிமுகவையே விரும்புவதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் திமுகவிற்கு பலமான எதிர்க்கட்சியாக இருபத்து அதிமுக தான். அதிமுகவின் தற்போதைய நிலையே தொடர்ந்தால் அது, அடுத்த தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக அமையும், திமுகவை எதிர்க்கவேண்டுமானால் இணைந்த அதிமுக தான் வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் தற்போது காய் நரகர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.