விரைவில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி – காய்களை நகர்த்தத் தொடங்கிய பாஜக…

விரைவில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி – காய்களை நகர்த்தத் தொடங்கிய பாஜக…

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி இலக்கு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தான் தற்போது தென்னிந்திய அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. புதுச்சேரியில் நடந்த அரசியல் மாற்றத்திற்கு பிறகு தென்னிந்தியாவில் பாஜக நுழைவதற்கு புதுச்சேரி வாசலாக அமைந்துவிட்டது என பேசப்பட்டது. தாமரை மலந்தே தீரும் என்ற அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சும், அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசியலில் பாஜக செயல்படும் விதமும் அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது.  வழக்கமாக பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம், டெல்லி, குஜராத் அல்லது பாஜக ஆளும் மாநிலங்கள் ஏதாவது ஒன்றில் நடப்பது தான் வழக்கம். தற்போது, தேசிய அரசியலில், சந்திர சேகரராவ் பாஜகவுக்கு மாற்றான புதிய அணியைக் கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதன் பின்னணியில், பாஜக தனது தேசிய செயற்குழுக் கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. ஆனால், இந்த குறுகிய பார்வையைத் தாண்டி, தென்னிந்தியாவில் கால் பதிப்பதற்காகவே பாஜக தற்போது தேசிய செயற்குழுக் கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்துகிறது என்பதை வெளிச்சமாகியுள்ளது. 


பாஜகவின் மெகா ப்ளான்: 


கேரளா, கர்நாடகாவைத் தாண்டி, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் மாநில கட்சிகள் தான் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இந்த மாநிலங்களில் பாஜக உள்நுழைய அல்லது ஆட்சியைக் கைப்பற்ற என்ன வியூகம் வகுக்கப் போகின்றது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மைக்காலமாக பாஜக தேசிய அளவில் விவாதங்களை உருவாக்கும் விவகாரமாக வாரிசு அரசியல் மாறியுள்ளது. மகாராஷ்ட்ரா அரசியலில் சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவும், உத்தவ் தாக்கரேவை வீழ்த்தி அவரது தளபதி ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சியில் அமர்த்தியதற்கும் பாஜக வகுத்துள்ள வாரிசு அரசியல் வியூகம் முக்கியமானதாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது போல், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடக்கும் ஆட்சிகள் வாரிசு அரசியல் என்ற புள்ளியில் தான் வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மூவருமே வாரிசு அரசியலுக்காக விமர்சிக்கப்படுகிறார்கள். இந்த பின்னணியில், மகாராஷ்ட்ரா அரசியல் போலவே இரு அரசியலைக் கட்டமைத்து, வாரிசு அரசியலை வீழ்த்துவதாக கூறி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் பாஜக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
தமிழ்நாட்டில் சாத்தியமா பாஜக ஆட்சி:
தற்போதைய சூழலில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வலுவான நிலையில் உள்ளன. மக்கள் மத்தியிலும் திமுக அரசு மீது அதிருப்தி இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மிகவும் பலவீனமாக உள்ளது. அதிமுகவின் உட்கட்சி பிரச்னையால் அந்த கட்சி தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வலுவாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடங்கி, திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பட்டியலை வாசித்தது வரை தமிழ்நாடு பாஜக அடுத்தடுத்து ஸ்டாலின் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால், பாஜக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி நிலையை அடைந்து அடுத்ததாக ஆளும் கட்சி நிலையை நோக்கி பயணிப்பதற்கான சூத்திரத்தை வகுத்துக்கொண்டு செயல்படுகிறதா என்ற பார்வை எழுகிறது.


பாஜகவால் வீழ்ந்த கட்சிகள்: 


தமிழ்நாட்டில் அதிமுகவை பலவீனப்படுத்தி பாஜக அரசியல் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கு ஏற்பவே, தேசிய அளவில் பாஜக யாரோடெல்லாம் கூட்டணி அமைத்தார்களோ அந்த கட்சிகள் எல்லாம் பலவீனமாகியிருப்பதை பார்க்க முடிகிறது.  சிரோன்மணி அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், அசோம் கணபரிசத், சிவசேனா, என்.ஆர். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பி.ஏ. சங்மா கட்சி, தெலுங்கு தேசம், மக்கள் குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு பாஜக கூட்டணி அமைத்திருந்தது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த, வேளாண் திருத்த சட்டங்கள், காஷ்மீரை பிரிப்பதற்கான சட்டம், தேசிய கல்விக்கொள்கை, நீட் உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் இந்த கட்சிகள் மாநில உரிமையை மீட்பதற்கான விஷயங்களைக் கையில் எடுத்து உரிமைக் குரல் எழுப்பவில்லை. சிரோன்மணி அகாலிதளம் மட்டும் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்தது. அதன் பிறகு அந்த கட்சியின் செல்வாக்கு என்ன ஆனது என்பதை பார்த்துக்கொண்டு தான் உள்ளோம். 


அதிமுகவை பலவீனப்படுத்தி சாதித்த பாஜக:


அதே நேரத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பிற்குபிறகு நடந்த ஆட்சி மாற்றத்தை பயன்படுத்து, மத்திய அரசு நீட் உள்ளிட்ட பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றியதாக விமர்சிக்கப்படுகிறது. இந்த பின்னணியில் பார்த்தால், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் குழப்ப நிலையை நீடிக்க வைத்து அதன் மூலம், பாஜக தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிராக அரசியல் செய்யும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. இது, அடுத்தடுத்து பாஜக ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட சாத்தியமான சூழலை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், பாஜக தென்னிந்தியாவில் நுழைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சும், பாஜக தேசிய செயற்குழுவில் பேசப்பட்ட விவாதங்களும் வெளிப்படுத்துகின்றன.