இபிஎஸ்க்கு நெருடலைத் தரும் வழக்குகள்..! கொடநாடு முதல் அதிமுக பொதுக்குழு வரை..!

கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் மீதான வழக்கு விசாரணை என்பது அரசியல் வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒன்றாகி உள்ளது. அடுத்தடுத்த விசாரணைகள், சோதனைகள் இபிஎஸ்க்கு தற்போது நெருடலை ஏற்படுத்தி உள்ளது. 

இபிஎஸ்க்கு நெருடலைத் தரும் வழக்குகள்..! கொடநாடு முதல் அதிமுக பொதுக்குழு வரை..!

கொடநாடு வழக்கு:

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. அ.தி.மு.க ஆட்சியில் முடியும் தறுவாயிலிருந்த வழக்கை, தற்போது தி.மு.க ஆட்சியில் தூசுதட்டி எடுத்து விசாரித்துவருகின்றனர்.

சுமார் ஐந்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தற்போது வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. சசிகலா, ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கொடநாடு வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கொடநாடு வழக்கு என்பது இபிஎஸ்க்கு மிகவும் நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுவதால், இதன் மீதான தீவிர விசாரணை இபிஎஸ்க்கு சற்று கலக்கத்தைக் கொடுத்துள்ளதாகவே கூறப்படுகின்றது.

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கு:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த போது நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை தனது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததன் மூலம் ரூ.4,800 கோடி ஊழல் செய்ததாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018 ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தனித் தனியாக மேல் முறையீடு செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி, சென்னை உயநீதிமன்றம் விதித்த சி.பி.ஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தது. 

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூலை 26 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு:

பல கட்ட சட்ட போராட்டங்களுக்குப் பின்னர் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம்  நடந்தது. அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். 

பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்னன் ராமசாமி, உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுவை நடத்தவில்லை என்றால் உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் பரிசீலிக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நேற்று அதாவது ஜூலை 28ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், உச்சநீதிமன்ற வழக்கு பட்டியலில் இந்த வழக்கு ஜூலை 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை உய்ரநீதிமன்றத்திலேயே நடத்திக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றம் பொதுக்குழு நடந்தது செல்லாது எனக் கூறினால் அது இபிஎஸ்க்கு பெரிய தோல்வியாகவே பார்க்கப்படும். ஜூலை 11 இல் இருந்து நடந்த எதுவுமே செல்லாததாகி விடும் என்பதால் இந்த வழக்கும் இபிஎஸ்க்கு மிக முக்கிய வழக்காக பார்க்கப்படுகின்றது