அதிமுகவை கைப்பற்ற சக்கரவீயூகம்..! நால்வரில் வெற்றி யாருக்கு?

அதிமுகவை கைப்பற்ற சக்கரவீயூகம்..! நால்வரில் வெற்றி யாருக்கு?

அதிமுக என்ற ஒற்றை நாற்காலியைக் கைப்பற்ற நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. நாற்காலியை கைப்பற்ற வகுப்படும் வியூகங்கள் என்ன?


அதிமுக நாற்காலி:

அதிமுகவின் தலைமை பொறுப்பு தனக்கு தான் என்பதில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் நால்வர் போட்டி போட்டுகொண்டு உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை அவருடன் இருந்தவர்கள், அவரின் மரணத்திற்கு பின்னர், அதிமுக நாற்காலிக்காக ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் அளவிற்கு எதிர் அணியினராக மாறியுள்ளனர்.

நான்குமுனை போட்டி:

ஜெயலலிதா இறந்த பின்னர் சிகலாவுடன் இருந்த ஓபிஎஸ்,  தர்மயுத்தத்தால் பிரிந்து,  சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் உடன் இணைந்தார். இபிஎஸ், ஓபிஎஸ் என இருவரும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு கட்சியை வழிநடத்தி வந்தனர். 

மேலும் படிக்க: பாதையை மாற்றும் ஓபிஎஸ் - நெருக்கடியில் ஈபிஎஸ்..! ஓபிஎஸ்க்கு கை கொடுக்குமா சட்ட போரட்டம்?

ஒற்றைத் தலைமை:

கட்சியின் அனைத்து முடிவுகளும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரின் கையொப்பமிட்டேஅறிக்கை வெளியிடப்பட்டது. ஜூன் 23 ஆண்டு நடந்த அதிமுக தலைமைக்கு கழகக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுபட்ட அன்று ஆரம்பித்த உட்கட்சி பூசல் இன்று நீதிமன்ற வழக்குகள் என சென்று கொண்டு உள்ளது.

ஓபிஎஸ் வீயூகம்:

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட பின்னர், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஈபியஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கிய ஓபிஎஸ், அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். 

இதனிடையே அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆதரவாளர்களை திரட்டி தனக்கான ஆதரவை நிரூபிப்பதற்கு ஓபிஎஸ் தரப்பு ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகின்றது.

ஓபிஎஸ்சின் தொகுதியான தேனியில், இபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக கட்சியின் பொருளாளருமான ஆர்.பி.உதயகுமார், திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை பெரும் அளவிலான தொண்டர்களை திரட்டி நடத்தினர். ஓபிஎஸ்ஸின் சொந்த தொகுதியில், இபிஎஸ் தரப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, எதிர்ப்பார்த்ததைவிட அதிக தொண்டர்கள் குவிந்ததால், அது ஓபிஎஸ்க்கு சற்று கலகத்தைக் கொடுத்ததாகவே கூறப்பட்டது. 

தன்னுடைய தொகுதியில் பலத்தை காட்டிய இபிஎஸ்க்குபதிலடி கொடுக்கும் விதமாக, எடப்பாடியின் பலமாக பார்க்கப்படும் மேற்கு தமிழ்நாடு பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள், ஆகஸ்ட் 3 அன்று, பெரியகுளத்தில் உள்ள பண்ணைவீட்டில் ஓபிஎஸ்ஸை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் வரும் நாட்களில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டடத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் ஆதரவு அளிக்க வருவார்கள் என அவர்கள் கூறி இருந்தது, சட்ட போராட்டத்திற்கு அடுத்தபடியாக, இபிஎஸ்க்கு எதிரான அரசியல் நகர்வை ஓபிஎஸ் கையில் எடுத்துள்ளதை தெளிவாக காட்டுவதாக விமர்சிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மேலும் படிக்க: அதிமுகவை இழுத்த ஜெயக்குமார்..! பெயர் பலகைக்காக தான் இந்த அவசரமா?

இபிஎஸ் வீயூகம்;

அதிமுக பொதுக்குழு நடத்தி, அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளராக  ஆனது முதல், சட்ட தீர்ப்புகள் அனைத்தும் இபிஎஸ்க்கு சாதகமாக இருப்பதை பார்க்க முடிகின்றது. ஓபிஎஸ் இன் சொந்த தொகுதியில் தனது தளபதி, ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுகவிற்க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது, ஓபிஎஸ் தொகுதியில் தனக்கான ஆதரவு என்ன என்பதை காட்டும் விதமாகவே பார்க்கப்பட்டது. 

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டும் வழக்கம் போல் அந்த பொதுக்கூட்டங்கள் அதிமுக சார்பில் நடத்தப்படவுள்ளன. ஓபிஎஸ் கோவையை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், இபிஎஸ் எந்த மாவட்டத்தை தேர்ந்தெடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது வந்தது. 

மதுரை, திருச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களை இபிஎஸ் தரப்பு தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேற்கு தமிழ்நாடு எடப்பாடியின் பலமாக பார்க்கப்படும் நிலையில், தெற்கு தமிழ்நாட்டிலும் தன்னுடைய பலத்தை காட்டுவதற்கான ஆயத்த வேளைகளில் இபிஎஸ் தரப்பு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சசிகலா வீயூகம்:

ஜெயலலிதாவின் நிழலாக உடன் இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும், சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார்.

சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர், தற்போது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுகவின் பல்வேறு மூத்த தலைவர்களை சந்தித்து வரும் சசிகலா, சமீபத்தில், பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசி இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிமுக குறித்து விவாதித்ததாக கூறப்பட்டது. 

தொண்டர்களை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள சசிகலா, சட்ட ரீதியாகவும் காய் நகர்த்தி வருகிறார். தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது செல்லாது என்று சசிகலா தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது. அந்த வழக்கின் மீது மீண்டும் மனு கொடுத்துள்ளார் சசிகலா. அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் தான் என்று சசிகலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு ஆகஸ்ட் இரண்டாவது வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

அதிமுக தலைமைப் பொறுப்பு  குறித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சசிகலாவின் இந்த வழக்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கு சற்று கலக்கத்தை கொடுத்துள்ளதாகவே கூறப்படுகின்றது.

மேலும் படிக்க: இபிஎஸ்க்கு எதிராக சசிகலா கையில் எடுத்துள்ள சட்ட ஆயுதம்..!

டி.டிவி. தினகரன் வீயூகம்:

இதனை நாட்கள் அதிமுக கட்சி விவகாரங்களில் அமைதி காத்து வந்த, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென கட்சி செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். சேலம், மதுரை, தேனி என அடுத்தடுத்த மாவட்டங்களில் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். 

தேனியில் நடைபெற்ற கூட்டத்தின் போது டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளரான சையது கான் சந்தித்தார். இதனால் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற ஸ்ரீவாரு மண்டபத்திலேயே பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

வெற்றி யாருக்கு?

இபிஎஸ் - ஓபிஎஸ் என இருமுனை போட்டியாக இருந்தது, தற்போது ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டி.டி.வி, தினகரன் என நன்கு முனை போட்டியாக மாறியுள்ளதை காண முடிகிறது. நால்வரின் சக்கரவீயூகமும் பலமாக உள்ளதால், யார் இதற்குள் சிக்கிக்கொள்ள போகிறார்? யார் வீயூகத்தை தகர்த்து அதிமுகவை கைப்பற்ற போகிறார் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.