வென்டிலேட்டரில் சந்திரசேகர ராவ் அரசாங்கம்..! மகாராஷ்டிராவை அடுத்து தெலுங்கான குறிவைப்பு..?

வென்டிலேட்டரில் சந்திரசேகர ராவ் அரசாங்கம்..! மகாராஷ்டிராவை அடுத்து தெலுங்கான குறிவைப்பு..?

தெலுங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி வென்டிலேட்டரில் உள்ளதால், அங்கு அரசு விரைவில் கவிழும் என அம்மாநில பாஜக தலைவர் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

சந்திரசேகர ராவ்:

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்டும் வேலைகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் தெலுங்கானா முதலமைச்சர் சத்திரசேகர் ராவ். மேலும் விரைவிலேயே தேசிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறார். 

பாஜக எதிர்ப்பு: 

சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து பாஜக உடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. சந்திரசேகர ராவ், பாஜக எதிர்ப்பை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். அரசு முறை பயணமாக மோடி தெலுங்கானா வந்த பொது சந்திக்காமல் தவிர்த்தது முதல், கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒட்டியது என அனைத்து நேரங்களிலும் எதிர்ப்பை காட்டி வருகிறார்.

மேலும் படிக்க: தொடர் தோல்வி..! பாஜகவில் இணைந்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர்..!

வென்டிலேட்டரில் அரசு:

''சந்திரசேகர ராவ் அரசாங்கம் வெண்டிலேட்டரில் உள்ளது. விரைவில் கவிழ்ந்துவிடும் எனவும், சந்திரசேகர் ராவ் ஊழலில் திளைக்கிறார். அவரது குடும்பத்தினர் அமலாக்கத்துறை, சிபிஐயை கண்டு பயப்படுகின்றனர்"
எனவும் பாஜக தெலுங்கானா தலைவர் பண்டி சஞ்செய் குமார் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.

எம்.எல்.ஏக்கள் விலை?:

ஆளும் கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை பாஜக விலை பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தெலுங்கானாவில் விரைவில் அரசு கவிழும் என பாஜக நிர்வாகி ஆருடம் கூறியிருப்பது, மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் மூலம் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து, ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக்கியதை போல, தெலுங்கானாவில் நிகழ உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

119 க்கு 88 :

அதே நேரம், 119 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவையில் 88 எம்.எல்.ஏக்களோடு தனிபெரும்பாண்மை பெற்று ஆட்சி நடத்தி வருகிறார் சந்திரசேகர ராவ். பாஜகவிற்கு 1 எம்.எல்.ஏ மட்டுமே உள்ள நிலையில், 19 தொகுதிகளை பெற்று தெலுங்கானாவில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. 2023 இல் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பண்டி சஞ்செய் குமாரின் கருத்து அரசியலில் கவனம் பெற்றுள்ளது.