2030 ஆம் ஆண்டிற்குள் ரூ. 23 லட்சம் கோடி இலக்கு : முதலீட்டாளர்களை ஈர்க்க முதலமைச்சரின் கனவு !!

தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் - திமுக அரசில் இதுவரை 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

2030 ஆம் ஆண்டிற்குள் ரூ. 23 லட்சம் கோடி இலக்கு  : முதலீட்டாளர்களை ஈர்க்க முதலமைச்சரின் கனவு !!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற முனைப்பில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

2030 ஆம் ஆண்டிற்குள் ரூ 23 லட்சம் கோடி அளவிலான முதலீட்டினை ஈர்ப்பதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அந்த இலக்கை எட்டும் பொருட்டு முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் முதலீட்டாளர்களின் மாநாட்டை அரசு நடத்தி வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான 35 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திப்பட்டன. 

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் மாதம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1880 கோடி ரூபாய் முதலீடும், 39,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி  கோவையில் கொடிசியா வளாகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில்    பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 52 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற சர்வதேச அணிகலன்கள் பூங்கா அடிக்கல் நாட்டுவிழாவிலும் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு துபாய் மற்றும் அபுதாபியில் மார்ச் 26 முதல் 28ஆம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ரூ. 6,100 கோடி அளவில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திப்பட்டன.  

இந்நிலையில் ஜூலை 4ல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ. 1.25 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் வகையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளது என்றார். 14-வது இடத்தில் இருந்து, தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய நற்சான்றிதழ் எனவும் பெருமிதம் கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் எனவும், திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை 2.20 ஆயிரம் கோடி ரூபாய் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.