தர்மமே மீண்டும் வெல்லும் - தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ்..! கருத்தின் பின்னணி என்ன?

நேற்று சென்னை விமான நிலையத்தில் மோடியை வழிஅனுப்பிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மமே மீண்டும் வெல்லும் எனக் கூறியுள்ளார்.

தர்மமே மீண்டும் வெல்லும் - தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ்..! கருத்தின் பின்னணி என்ன?

தர்ம யுத்த நாயகன்: 

தர்ம யுத்தம்’ திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டபோது பயன்படுத்திய வார்த்தை! அந்த வாசகத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு  பிப்ரவரி 7 இல் பிரபலமாக்கினார் ஓ.பன்னீர்செல்வம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக்கப்பட்ட ஓபிஎஸ் திடீரென அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர், ஜெயலலிதா நினைவிடத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்சியில் தனக்கு எதிராக சதி நடக்கிறது. முதல்வர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டேன். கட்சியை மீக்க தர்மயுத்தம் நடத்துவேன். தர்மம் வெல்லும் என்று கூறினார். 

ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவு:


சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது, ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைப்பது’ ஆகிய இரண்டும் தான் ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தின் கோரிக்கைகள்! இவற்றை இபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொண்டதால், அணி இணைப்புக்கு ஒத்துழைத்தார் ஓபிஎஸ். அதன் பின்னர் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவு நடைபெற்றது. அதிமுகவின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஜெயலலிதா தான் என கூறி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை உருவாக்கி இருவரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக 4 ஆண்டுகளை நிறைவு செய்தார். அவரின் அனைத்து முடிவுகளுக்கும் துணை முதலமைச்சர் என முறையில் உடன் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். எந்த அறிவிப்பாக இருந்தாலும் இருவரின் பெயரிட்டே வெளியிப்பட்டது.

ஒற்றைத் தலைமை:

ஜூன் 14 இல் நடத்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுப்பப்படத்தில் இருந்து கட்சிக்குள் ஒற்றைத் தலைமை என்கின்ற புகைச்சல்கள் ஏற்பட்டது. ஒற்றை தலைமை வேண்டும் என்பவர்கள் இபிஎஸ் பக்கமும், இரட்டை தலைமையே தொடரட்டும் என்பவர்கள் ஓபிஎஸ் பக்கமும் சென்று விட, கட்சி யாருக்கு என்ற போட்டி ஏற்பட்டது.

ட்விட்டரில் ஒரு தர்மயுத்தம்;

ஜூன் 23 அன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதற்காக வேளைகளில் இபிஎஸ் தரப்பு மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்த நேரத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மீண்டும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று ஓபிஎஸ் ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.

அதிமுக பொதுக்குழு;

பல கட்ட அரசியல் வழக்குகளுக்கு பின்னர் ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதுகக் கூறி, அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளராக எப்படி பழனிச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். ஓபிஎஸ் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கினார். 

பொதுக்குழு நடைபெற்ற அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்தார் ஒபிஎஸ். அதனால் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஆதர்வாளர்களிடையே மோதல் மூண்டதால், வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

சட்ட போராட்டங்கள்:

இபிஎஸ்க்கு எதிராக கட்சியை கைப்பற்றும் நோக்கில் பல சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார் ஓபிஎஸ். அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு முதல், எம்.ஜி.ஆர் மாளிகை சீல் வைக்கப்பட்ட வழக்கு முதல் அனைத்தையும் சட்டத்தின் மூலமாக எதிர்கொண்டார். ஆனால் வழக்கின் தீர்ப்புகள் அனைத்தும் இபிஎஸ்க்கு சாதகமாகவே அமைந்தது.  
 
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்:

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவிற்காக சென்னை வந்திருந்த பிரதமர் மோடி ஜூலை 29 ஆம் தேதி டெல்லி புறப்பட்டார். அவரை வழியனுப்ப சென்னை விமான நிலையம் சென்ற ஓபிஎஸ், மோடியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மோடி தன்னுடைய உடல் நலம் குறித்து கேட்டதாக தெரிவித்தார். அதிமுக கட்சி பிரச்சனைகள் குறித்து கேட்டதற்கு தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும் எனக் கூறியுள்ளார்.

இரட்டை இலை:

2017 ஆம் ஆண்டு, தர்மயுத்தத்திற்கு பின்னர், அதிமுக சசிகலா அணி, மதுசூதனன் அணி என இரண்டாக பிளவுபட்டு இருந்த நேரத்தில், இரு அணியினரும்  இரட்டை இலைக்கு உரிமை கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் இரட்டை இல்லை சின்னத்தை மதுசூதனன், ஓபிஎஸ் அணிக்கு வழங்கியது.

அதே நகர்வை தான் தற்போது ஓபிஎஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. கட்சியும், ஆதரவாளர்களும் இபிஎஸ்க்கு அதிகமாக இருந்தாலும் இரட்டை இலையை தன் வசமாக்கும் சட்ட நகர்வு தெரிந்தவர் ஓபிஎஸ் என்பதால், கட்சியைக் கைப்பற்ற இரட்டை இலையை முடக்கும் ஆயுதத்தை இறுதியாக கையில் எடுப்பார் என்பதால் மீண்டும் ஒரு தர்மயுத்தம் நிகழலாம் என பேசப்படுகின்றது.