இழுத்தடிக்கும் காங்கிரஸ்...! இதற்குத்தானா ஓட்டு போட்டோம்.....? என அதிருப்தியில் மக்கள்.

இழுத்தடிக்கும் காங்கிரஸ்...!  இதற்குத்தானா ஓட்டு போட்டோம்.....? என அதிருப்தியில் மக்கள்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்றும் கூட இன்றுவரை முதலமைச்சர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சி இழுத்தடித்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பின்னர் 130க்கும் மேற்பட்ட இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சா் யார்? என்ற கேள்வியும் எழுந்தது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதலமைச்சா் வேட்பாளர் என்று எவரையும் அறிவிக்காத நிலையில் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சா் பதவிக்கான போட்டி நிலவுகிறது. 

வழக்கமாக காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் வெற்றி பெரும் பட்சத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகிப்பவர் எவரோ அவரே முதல்வராகவும் பதவி ஏற்பார். இதன்படி  மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பதவிக்கும்  டி.கே. சிவக்குமார்தான் முதல்வராக பதவி ஏற்றிருக்க வேண்டும்.

ஆனால் இந்த முறை இதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் 136 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சா் யாா் என தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனை ஒட்டி  சித்தராமையாவும், டி.கே. சிவக்குமாரும் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய  தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே உள்ளிட்டோரை மாற்றி மாற்றி சந்தித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்டன. மேலும் 18ஆம் தேதியான நாளை முதலமைச்சரின் பதவி ஏற்பு விழா நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போதுவரை முதல்வர் யார் என அறிவிப்பதில் இழுபறி நிலவி வருகிறது. ஒரு வேளை பாஜக இந்த தேர்தலில் வென்று இருந்தால் அடுத்த நாளே முதல்வரை அறிவித்திருப்பார்கள். அவர்களின் அறிவிப்பிற்கு மாநில நிர்வாகிகளும் கட்டுப்பட்டிருப்பார்கள். ஆனால் காங்கிரஸ் தனது கட்சியை கட்டுப்படுத்துவதில் அவ்வாறான அக்கறையை காட்டவில்லை. 

முதலமைச்சர் தேர்வில் இவ்வளவு காலம் இழுத்தடிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு இது எரிச்சலூட்டியுள்ளது. மேலும் "இவர்களை நம்பி மாநிலத்தை ஒப்படைத்தால் இவர்கள் அதிகார சண்டையை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கர்நாடக தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படும் சூழலில் முதலமைச்சரை தேர்வு செய்வதில் இப்படியான தாமதத்தை காங்கிரஸ் செய்வதும் பதவிக்காக காங்கிரஸ் கட்சியினர் அடித்துக்கொள்வதும் கர்நாடகம் மட்டுமின்றி இந்தியா முழுக்க நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை காங்கிரஸ் தலைமை உணர வேண்டும்.