சிவி சண்முகம் மூலம் ஓபிஎஸ் மகன் பதவிக்கு ஆப்படித்த எடப்பாடி!! இதெல்லாமே பழைய பிளான் தான்.!!  

சிவி சண்முகம் மூலம் ஓபிஎஸ் மகன் பதவிக்கு ஆப்படித்த எடப்பாடி!! இதெல்லாமே பழைய பிளான் தான்.!!  

அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம் என்ற சி.வி.சண்முகத்தின் பேச்சால் பன்னீர்செல்வம் தரப்பு அரண்டுபோய் கிடைப்பதாக கூறுகிறார்கள் அதிமுவினர். 

நேற்று விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம் "அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை. நாம்  பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை சந்தித்தோம். அவர்கள் கூட்டணியால், சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழந்து விட்டோம்" எனக் கூறி அரசியல் அரங்கை பரபரப்பாகியுள்ளார். 

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலிருந்தே பாஜக அதிமுக கூட்டணியில் தான் நீடித்து வருகிறது. ஆனால் அப்போதிலிருந்தே அது முரண்பட்ட கூட்டணியாக தான் இருந்து வருகிறது. அந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றதற்கு பாஜக தான் காரணம் என அதிமுக தலைவர்கள் வெளிப்படையாகவே பேசினர்.  அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தலில் பாஜகவை கழட்டி விட வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதன்பின் வந்த உள்ளாட்சி தேர்தலில் கூட அதிமுக பாஜக வை சீண்டவில்லை. 

மேலும் இதே போல சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணியை சேர்க்கக்கூடாது என்று சில அதிமுக தலைவர்கள் பகிரங்கமாக பேசினார்கள். ஆனால், பாஜக தலைவர் எல்.முருகன் மட்டும் நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று தொடர்ந்து கூறிவந்தார். அதோடு, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை தான் கூறும் என்று கூறிவந்தார். இதை அதிமுக ரசிக்கவில்லை. 

இதை தொடர்ந்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தேசிய கட்சிகள் என்று சொல்லி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இதனால்  அதிமுக  பாஜக-அதிமுக கூட்டணி முடிவுக்கு  என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சூழலில் அமித் ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார் பன்னீர்செலவம். இது எடப்பாடிக்கே தெரியாமல் பன்னீர்செல்வம் எடுத்த முடிவு என்று அப்போது கூறப்பட்டது. 

அதன்பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோல்வியை சந்தித்தது. வன்னியருக்கு இடஒதுக்கீடு கொடுத்ததே இந்த தோல்விக்கு காரணம் என பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்து கூறிவர இப்போது தோல்விக்கு காரணம் பாஜக தான் என்று சொல்லி புதிய குண்டை போட்டுள்ளார் சி.வி.சண்முகம். 

சி.வி.சண்முகம் இப்படி பேசியதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், இது பன்னீர் செல்வத்திற்கு வைக்கப்பட்ட செக் என்றும் அதிமுக வட்டாரத்தில் பேசுகிறார்கள். அதாவது 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமே வெற்றிபெற்றார். இதன் காரணமாக தன் மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதய்வயை பெற பன்னீர்செல்வம் கடுமையாக முயன்றார். ஆனால் எடப்பாடி தரப்பில் வைத்தியலிங்கத்தை அமைச்சராக முன்னிலைப்படுத்தினார்கள் என்று சொல்லப்பட்டது. இந்த மோதல் காரணமாக அதிமுகவில் யாருக்குமே அமைச்சர் பதவியை பாஜக கொடுக்கவில்லை. 

இந்நிலையில், தற்போது ஒன்றிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதில் பல புதிய அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்கவுள்ளார்கள். இதில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த புதிய அமைச்சர்கள் பட்டியலில் தன் மகனை சேர்க்க பன்னீர்செல்வம் முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் ஒன்றிய அமைச்சரானால் பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு கட்சியில் அதிகரிக்கும். 

இதை எடப்பாடி  தரப்பு விரும்பவில்லை என்றும், இதன் காரணமாக தான் தன் ஆதரவாளரான சண்முகம் மூலம் பாஜகவுக்கு எதிராக பேசவைத்துள்ளார். சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு அதிமுகவின் கருத்தாகவே பாஜகவால் பார்க்கப்படும். இதனால் தன்னை விமர்சித்த அதிமுகவிற்கு அமைச்சர் பதவியை பாஜக தலைமை கொடுக்காது என்று திட்டம் போட்டு எடப்பாடி தரப்பு இப்படி பேசியிருக்கிறது என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.