அதிமுகவுக்கு அல்லு தெறிக்கவிட்ட மண்டல நிர்வாகி..!கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என தலைமைக்கு நோட்டீஸ்..!

அதிமுக நிர்வாகி கட்சி தலைமைக்கு நோட்டீஸ்..!

அதிமுகவுக்கு அல்லு தெறிக்கவிட்ட மண்டல நிர்வாகி..!கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என தலைமைக்கு நோட்டீஸ்..!

சசிகலா வருகை, தலைவர் பதவிக்கு போட்டி, தேர்தலில் தோல்வி, நிர்வாகிகளுடன் சசிகலா உரையாடல் என அடுத்தடுத்து அதிமுகவில் அம்புகள் இறங்கிக் கொண்டிருக்க, இது போதாது என்று சொந்தக்  கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், தன்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என அதிமுக தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பி மிகப்பெரிய கடாயுதத்தை எறிந்துள்ளது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், நிம்மதி பெருமூச்சு விட்டு தேர்தல் பணிகளில் இறங்கினர் அதிமுகவினர். தேர்தலில் எதிர்பார்த்தப் படி தோல்வியை சந்தித்த அதிமுக, எதிர்பார்த்த தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு காரணம் அதிமுக-பாஜவுடன் கூட்டணி வைத்தது தான் என அரசியல் விமசகர்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டா போட்டி நடைபெற்ற நிலையில், பிறகு ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராகவும், பன்னீர்செல்வம் எதிர்கட்சி துணை தலைவராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து ஓய்வில் இருந்த சசிகலா, விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி சென்று படிப்பை தொடர்வதைப் போல மீண்டும் துள்ளி எழுந்து அதிமுகவை கைப்பற்றுவேன் என அதிமுக, அமமுக தொண்டர்களிடம் போன் பேசி வருகிறார். 

கட்சி தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு நான் மீண்டும் நிச்சயம் அரசியலுக்கு வந்து அதிமுகவை கைப்பற்றி, ஜெயலலிதா கட்சியை வழிநடத்தியது போல், கட்சியை வழிநடத்துவேன் என நம்பிக்கையூட்ட ஆரம்பித்தார். இதன் மூலம் சசிகலாவின் 2.0 அரசியல் பிரவேசம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டதை கண்டு செய்வதறியாது திகைத்தனர் அதிமுகவினர்.

சசிகலாவின் 2.0-வால் மீண்டும் செய்தியாளர்களின் பார்வை சசிகலா மீது விழத் தொடங்கியது. ஆங்கிலப் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறார் சசிகலா. தனது சுய சரிதை மட்டுமல்லாது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்த சம்பவங்களையும் பேட்டியில் கூறியிருக்கிறார். இதனால் ஆட்டம் கண்ட அதிமுக தலைமை, அனைத்து மாவட்ட செயலாளர்களும், கூட்டம் கூட்டி சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் எடுக்கக் கோரி உத்தரவிட்டது. இதிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் இயற்றியது மேலும் இடி விழுந்தது போல் இருந்தது அதிமுக தலைமைக்கு. 

என்னடா செய்வது? என்று தலையில் கை வைத்து உட்கார்ந்த அதிமுக தலைமை, சசிகலாவுடன் செல்போனில் பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோரை நீக்கியுள்ளது அதிமுக தலைமை. அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் அமமுக பக்கம் செல்வார்களா? அல்லது திமுக பக்கம் செல்வார்களா? என அனைவரும் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், யாருமே எதிர்பாராத வண்ணம், அதிமுக தலைமையால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவர், தன்னை நீக்கியது செல்லாது என கட்சி தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

தூத்துக்குடி அதிமுக நிர்வாகியான ரூபன் கே.வேலவன் என்பவரது வழக்கறிஞர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அனுப்பியுள்ள நோட்டீஸில், 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் சேர்ந்து ஓயாத கட்சி பணிகளில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்டுள்ளார். தனது கட்சி பணிகளை அங்கீகரிக்கும் வகையில்,1991-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் அதிமுக மாணவரணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

17 ஆண்டுகள் விளாத்திக்குளம் ஒன்றிய கழக செயலாளராக  பதவி வகித்திருப்பதாக தெரிவித்துள்ள ரூபன் கே.வேலவன், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது இல்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 27ம் தேதி அதிமுக கொள்ளை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாக அதிமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்து தம்மை நீக்கி இருப்பதாக வெளியான அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிமுகவில் திருத்தப்பட்ட துணை விதிகளின் படி, தம்மிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கி இருப்பது செல்லாது என்று கூறியுள்ளார். மேலும், பன்னீர்செல்வம், பழனிசாமியின் அறிவிப்பு எந்த வகையிலும் தன்னை கட்டுப்படுத்தாது எனக் கூறியுள்ளார். 

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவுடன் பேசியதற்காக கட்சியில் இருந்து, நீக்கப்பட்டவர் ரூபன் கே.வேலவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்டோரை, சசிகலாவிடம் பேசியதற்காக அதிமுக தலைமை நீக்கியுள்ள நிலையில், முதன்முறையாக தலைமைக்கு எதிராக கட்சி நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கியிருப்பது கட்சி தலைமையாளர்களிடம் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.