கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்படும் பணம்...எவ்வளவு தான் வைத்திருக்கலாம் ஒரு வீட்டில்..?

கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்படும் பணம்...எவ்வளவு தான் வைத்திருக்கலாம் ஒரு வீட்டில்..?

நாட்டில் எங்கு பார்த்தாலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம், நகை வைத்திருக்க வேண்டும்? என்ற கேள்வி நம்முள் பலருக்கும் எழக்கூடும். அந்த சந்தேகத்திற்கு இந்த தொகுப்பு பதில் அளிக்கும் வகையில் இருக்கும். 

அளவுக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள், தனது வருமானத்திற்கு உரிய வருமான வரி செலுத்தாதவர்கள் என வருமான வரித்துறை சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் பொதுவாக சோதனை நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு சோதனை நடத்தும் போது, கணக்கில் வராத கட்டு கட்டாக பணம், நகைகளை பல இடங்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  

தமிழ்நாட்டில் கூட கடந்த 3 நாட்களாக சினிமா பைனான்சியர் அன்புச் செழியன், சினிமா பட தயாரிப்பாளர்கள் கலை புலி தானு, எஸ்.ஆர்.பிரபு, தியாகராஜன் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதில் சினிமா பைனான்சியர் பண்டாரி என்பவரது வீட்டில் இருந்து சுமார் 15 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இவை ஒரு பக்கம் என்றால், சில தொழிலதிபர்கள் வீடுகளில் 100 சவரன் 200 சவரன், லட்சக்கணக்கில் ரொக்கப் பணம் போன்றவையும் திருடு போகிறது. அப்படியெனில் ஒரு தனிநபர் வீட்டில் எவ்வளவு பணம், நகை தான் வைத்துக் கொள்ள வேண்டும்? அதற்கு ஏதேனும் வரைமுறை உள்ளதா?

ஆம் உள்ளது. தனது வீட்டில் ஒருவர் எவ்வளவு பெரும் தொகையையும் கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த தொகை எப்படி வந்தது என கேள்வி எழும் போது அதற்கான முறையான பதில் விளக்கம் இருக்க வேண்டும் உதாரணத்திற்கு ஒருவரது வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருக்கின்றது என்றால், அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தும் போது, அந்தப் பணம் எப்படி கிடைத்தது என்பதை ஆதாரத்துடன் விளக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கணக்கில் வராத பணத்திற்கு 137% வரை அபராதம் செலுத்த நேரிடும். 

எவ்வளவு தங்கம் ஒருத்தர் வீட்டில் இருக்கலாம்?


வருமான வரி உச்சவரம்பின் படி, திருமணமான பெண் 62.5 சவரன் வைத்துக் கொள்ளலாம். திருமணமாகாத பெண் 32.25 சவரனும், ஆண்கள் 12.5சவரனும் வைத்துக் கொள்ளலாம். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் மேலே கூறப்பட்டுள்ள அளவில் தங்கம் இருக்கலாம். இந்த அளவை தாண்டியோ அல்லது வேறு ஒருவரின் தங்கமோ இருந்தால் அதனை வருமான வரித்துறை பறிமுதல் செய்யலாம். 

சில சமயங்களில் கிராமப்புறங்களில் எல்லாம், பாரம்பரிய நகைகள் என சில நகைகளை செண்டிமெண்ட்க்காக வைத்திருப்பர். அவை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருப்பின், அந்த தங்கத்தை பறிமுதல் செய்யாமல் விடுவது சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அதிகாரியின் விருப்பதற்கு உட்பட்டது. இந்தியாவில் பலரும் குடும்ப நகைகளை மொத்தமாக ஒரே பேங்க் லாக்கரில் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அப்படி வைக்கும் போது, அதிகாரிகள் அதனை தவறாக புரிந்து கொண்டு பறிமுதல் செய்யக் கூடும் என்பதால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித் தனி லாக்கரில் நகைகளை சேகரித்து வைத்துக் கொள்வது குழப்பத்தை தவிர்க்கும் என்கின்றனர் அதிகாரிகள்.