ஆவின் பால் முதல்...ஆவின் வெண்ணெய் விலையேற்றம் வரை...!

ஆவின் பால் முதல்...ஆவின் வெண்ணெய் விலையேற்றம் வரை...!

ஆவின் பால் விலை ஏற்றம் முதல் ஆவின் வெண்ணெய் விலையேற்றம் வரை...!

தேர்தல் அறிக்கை:

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி ஆவின் பால் விலை குறைப்புக்கு  தனது முதல் கையெழுத்தையிட்டார். அதன்படி, ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அரசாணை வெளியிட்டப்பட்டது. லிட்டருக்கு 3 ரூபாய் என்பது மிக குறைவு என பொதுமக்களும், எதிர்க்கட்சி தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தொடர் விலையேற்றம்:

ஏற்கனவே, ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் தான் குறைக்கப்பட்டுள்ளது என மக்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர்களுக்கு மேலும் நிதி சுமையை அதிகரிக்கும் விதமாக தமிழக அரசு மின் கட்டண வரி, சொத்து வரி என அடுத்தடுத்த பேரிடியை இறக்கி வந்தது. அதேசமயம், பால் விலையை குறைப்பது போல் குறைத்து, ஆவின் பொருட்கள் அனைத்தையும் விலை உயர்த்தியது. ஆவின் நெய், ஆவின் க்ரீம், ஆவின் ஸ்வீட்ஸ் என அனைத்துக்கும் விலையை உயர்த்தியது. இந்த விலையேற்றம் மக்களுக்கு தமிழக அரசின் மீது இருந்த அதிருப்தியை மேலும் அதிகரிக்க செய்தது.

நவம்பரில் பால் விலையேற்றம்:

இதையடுத்து, கடந்த நவம்பர் 5 ஆம் தேதி 2022 அன்று ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தியது. இந்த விலை உயர்வை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் போராட்டத்தில் இறங்கினர். 

அமைச்சர் விளக்கம்:

இதைத்தொடர்ந்து, திடீர் பால் விலையை குறைக்க வேண்டும் என சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் நிர்வாகம் நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதால் தான் இந்த திடீர் விலையேற்றம் என்று விளக்கம் அளித்தார். 

நெய்யின் விலையேற்றம்:

ஆவின் பால் விலையை தொடர்ந்து, நேற்று 3 வது முறையாக ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. முதலில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி ஆவின் நெய் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 515 லிருந்து ரூ 535 ஆகவும், 2வது முறையாக கடந்த ஜூலை மாதம் லிட்டருக்கு 45 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 535 லிருந்து ரு. 580 ஆகவும், தற்போது 3 வது முறையாக கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ. 580 லிருந்து ரூ. 630 ஆக விலை உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் 3 வது முறையாக ஆவின் நெய்யின் விலை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

வெண்ணெய் விலையேற்றம்:

இதேபோன்று, ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. அதன்படி, 

உப்பு கலக்காத வெண்ணெய்

100 கிராம் : ரூ.52 - ரூ.55

500 கிராம் : ரூ.250 - ரூ. 260 

உப்பு கலந்த வெண்ணெய்

100 கிராம் : ரூ.52 - ரூ.55

500 கிராம் : ரூ.255 - ரூ. 265 ஆகவும் அறிவித்துள்ளது.

இந்த தொடர் ஆவின் பொருட்களின் விலையேற்றம் சாமானிய மக்களின் தலையில் அதிக நிதி சுமையை வைப்பது போலவே அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது ஒன்று, ஆனால் செயல்படுத்துவது ஒன்று என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.