காங்கிரஸை வீழ்த்துமா குலாம் நபியின் ஜனநாயக ஆசாத் கட்சி...!

காங்கிரஸை வீழ்த்துமா குலாம் நபியின் ஜனநாயக ஆசாத் கட்சி...!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், தமது புதிய கட்சி பெயரை  அறிவித்தார்.  

தொடர் குரல் எழுப்பிய மூத்த தலைவர்கள்:

காங்கிரஸ் கட்சி தொடர் தோல்வியை சந்தித்த வந்த நிலையில், கட்சிக்கு சீரமைப்பு மாற்றங்கள் தேவை என்பதால் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி  வந்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி மேலிடத்திற்கு கடிதத்தையும் அனுப்பினர். ஆனால், அதை எதையும் காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கட்சியிலிருந்து விலகினர். அதில் ஒருசிலர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். 

கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத்:

அதேபோன்று, காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியதுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி விலகினாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு-காஷ்மீரில் மூத்த நிா்வாகிகள் பலா் காங்கிரஸிலிருந்து வெளியேறினா். 

இதையும் படிக்க: பாஜகவின் பிம்பங்களை உடைத்து சவால்களை சாதனைகளாக மாற்றுவாரா அசோக் கெலாட்!!!

மக்களே முடிவு செய்வார்கள்:

காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம், தான் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும், புதிய கட்சியை தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஜம்மு காஷ்மீரில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்திருந்த குலாம் நபி ஆசாத், தமது கட்சியின் பெயரை ஜம்மு காஷ்மீர் மக்களே முடிவு செய்வார்கள் என்று கூறியிருந்தார்.

கட்சியை அறிவித்த குலாம்:

அதன்படி, இந்த மாத தொடக்கத்தில் தமது கட்சியின் கொள்கைகளை வெளியிட்ட குலாம்நபி ஆசாத், இன்று தமது புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவித்தார்.  கட்சிக்கு ஜனநாயக விடுதலை(ஆசாத்) கட்சி என்று பெயர் சூட்டியுள்ள குலாம் நபி ஆசாத், அதன் மூவர்ணக் கொடியை செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். அந்த கொடி மூன்று வண்ணங்களை கொண்டு இருந்தது. அதாவது, இளமஞ்சள், வெள்ளை,நீலம் என மூன்று வர்ணக்கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கொடியில் உள்ள இளமஞ்சள் - படைப்பாற்றல்; வெள்ளை - அமைதி , நீலம் - சுதந்திரம், கற்பனை ஆகியவற்றை குறிக்கிறது. குலாம் நபி ஆசாத்தின் இந்த முடிவின் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் சரிவை சந்திக்குமா? என்ற பார்வை அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் வட்டமடித்து வருகிறது.