தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? அதைத்தான் பின்பற்றுகிறதா திராவிட மாடல்?

தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? அதைத்தான் பின்பற்றுகிறதா திராவிட மாடல்?

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, திராவிட மாடல் குறித்து விமர்சித்துள்ளார்.

ஜேபி நட்டாவின் பதவி நீட்டிப்பு:

பாஜவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, டெல்லியில் கடந்த 16 மற்றும் 17 ம் தேதி பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது . அந்த கூட்டத்தில், 9 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் காரணத்துக்காக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் 2024 ஜூன் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

குஜராத்தில் பாஜக சரித்திரம் :

குஜராத் மாநிலத்தில் பாஜக உட்பட எந்த கட்சியும் இதுவரை பெறாத பெரும்பான்மையை இந்த முறை பாஜக பெற்று சரித்திரம் படைத்துள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். பாஜக குறித்த எதிர்கட்சிகளின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது என்றும் கூறிய அவர், இமாச்சலில் 500 க்கும் குறைவான வாக்குகளால் 10 க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றியை தவறவிட்டதாக கூறினார்.

பாரத் ஜோடோ யாத்திரை :

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்த பதிலளித்த எச்.ராஜா, ராகுல்காந்தி பயணம் என்ற பெயரில் அவ்வப்போது பாட்டி வீட்டுக்கு சென்று ஓய்வு எடுப்பதாகவும், அவரின் யாத்திரை முடியும் போது வெறும் “ சோடோ..” வாகத்தான் இருக்கும் என்று விமர்சித்தார்.

திராவிட மாடல் :

தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த எச்.ராஜா, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போலவே திராவிட மாடலை பின்பற்றுபவர்கள் காட்டிக் கொள்வதாகவும், திருமணம் கடந்த உறவுக்கு சொந்தக்காரர்களான சிலர் இந்திய ஒற்றுமையை விரும்புவதில்லை, அவர்கள்தான் காசி தமிழ் சங்கத்தை எதிர்த்தனர் என்றும் திராவிட மாடல் ஆட்சி குறித்து விமர்சனம் செய்தார்.

அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா?:

ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, ஈரோடு இடைத்தேர்தல் குறித்து நாளை கடலூரில் நடைபெறவுள்ள பாஜக செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்  என்றும், பாஜக சார்பில்  குழு அமைத்தது முதல் கட்ட தேர்தல் பணி என்றும், அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்த கற்பனை வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

அதிமுக சின்னம் குறித்து நான் கருத்து கூற முடியாது : 

அதிமுக சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக சின்னம் குறித்து நான் கருத்து கூற முடியாது என்றும், ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் செல்வாக்கு கொண்ட தலைவர்கள் தான். எனவே, இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதற்கு அவர்களுக்கு பொன்னான வாயப்பு கிடைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.