அதிமுகவுக்கும், இரட்டை இலை சின்னத்திற்கும் முதல் வெற்றி கொடுத்தவர்..! மறைந்தாலும் தலைவர்கள் மனதில்..!

அதிமுகவுக்கும், இரட்டை இலை சின்னத்திற்கும் முதல் வெற்றி கொடுத்தவர்..! மறைந்தாலும் தலைவர்கள் மனதில்..!

அதிமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்றால் அதன் சின்னம் தான். தமிழ்நாட்டில் உதயசூரியனை வீழ்த்திவிட வேறு ஏதும் சின்னம் உதயமாகுமா? என அரசியல் தலைகள் பேசிக்கொண்டிருந்த வேளையில், அந்த சூரியனையே மறைக்கும் படியாக தோன்றியது இரட்டை சிலை. இன்று வரையிலும் பல கிராமங்களில் இந்த சின்னத்திற்காகவே வாக்களிக்கும் மக்களுக்கு மனதில் பதிந்த இரண்டே சின்னங்கள் உதயசூரியன், இரட்டை இலை. அதிமுகவில் தலைகள், தலைமைகள் மாறினாலும் இந்த இரட்டை இலை சின்னம் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சின்னத்தில் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர். உடல்நிலை சரியில்லாததால் மாயத்தேவர் நேற்று உயிரிழந்தார். அவரது வரலாற்றையும் சேர்த்து அதிமுகவின் வரலாற்றையும் நாம் அசைப்போட வேண்டிய நேரம் இது. 

1935-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்தவர் மாயத்தேவர். பெரிய கருப்பத்தேவர்-பெருமாயி இணையருக்கு உசிலம்பட்டி அருகேயுள்ள டி.உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். பள்ளிக்கல்வியை பாளையங்கோட்டையிலும், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக் கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கறிஞராகவும் பணிபுரிந்தவர். 

திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1972-ம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த எம்ஜிஆர் தனது பலத்தை நிரூபிக்க காத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திண்டுக்கல் தொகுதி எம்.பியாக இருந்த ராஜாங்கம் மரணமடைந்ததால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

அந்த தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் மாயத்தேவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி, தோல்வியை தாண்டி, எம்ஜிஆர் கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக திமுக சார்பில் பொன்.முத்துராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 16 சின்னங்களில் எதையேனும் தேர்ந்தெடுக்கும் படி மாயத்தேவரிடம் அதிகாரிகள் கூற, அவர் தான் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தார். 

அன்று அவர் தேர்வு செய்த சின்னம் தான் 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. அப்படி முதன் முறையாக அதிமுகவிற்கு சின்னம் தேர்வு செய்யப்பட்டு, அந்த சின்னத்தினை கொண்டு தேர்தலை சந்தித்த மாயத்தேவர்,  2.6 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுகவுக்கும், அதன் சின்னமான இரட்டை இலைக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தவர் என்ற பெருமைக்குரியவர் மாயத்தேவர். 

அதன் பின்னர் அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்பது வேறு கதை. திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் நின்றும் வெற்றியும் பெற்றிந்தார் மாயத்தேவர். கடந்த 15 வருடங்களாக அரசியலை விட்டு விலகி இருந்து வந்தவர், நேற்று மதியம் 12.30 மணியளவில் இயற்கை எய்தினார். அதிமுகவின் முதல் வெற்றியாளர் என்ற பெருமையை அவர் பெற்றிருப்பதால், அதிமுக நிர்வாகிகளும், பின்னாளில் திமுகவிலும் அவர் இருந்ததால், திமுக நிர்வாகிகளும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த மாயத்தேவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், மூன்று மக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..