அதிமுகவை கைப்பற்ற தேனி கர்ணனிடம் பிளானை சொன்ன சசிகலா... அதிர்ச்சியில் எடப்பாடி...

கட்சி வீணாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் நிச்சயம் நான் வருவேன் என்று சசிகலா உறுதியோடு கூறியிருக்கிறார்.

அதிமுகவை கைப்பற்ற தேனி கர்ணனிடம் பிளானை சொன்ன சசிகலா... அதிர்ச்சியில் எடப்பாடி...
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைச் சென்ற சசிகலா, விடுதலைக்குப் பின்பு தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அரசியலைவிட்டும், பொதுவாழ்க்கையிலிருந்தும் விலகியே இருந்தார். அதேநேரம், நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் யாருக்கு ஆதரவு என்று எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்தார். அதிமுக தேர்தலில் தோல்விடைந்த நிலையில், அக்கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பதவிப்போட்டியும் அதிகாரப்போட்டியும், கோஷ்டி பூசலும் தலைவிரித்தாடிய நிலையில் ஒருவழியாக எதிர்க்கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி  தேர்ந்தெடுக்கப்பட்டார். இருந்தாலும் இருவருக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. ஒருபக்கம் திமுக அரசினை கடுமையாக விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமி, மறுபக்கம் திமுகவின் செயல்பாடுகளை வரவேற்கும் ஓபிஎஸ் என இருவரும் இருதுருவமாக நிற்கின்றார்கள்.
 
அதிமுக அடுத்த தேர்தலுக்குள் இருக்குமா இல்லை காணாமல் போய்விடுமா என்கின்ற கேள்வி அந்த கட்சித்தொண்டர்களுக்குள்ளேயே கேள்வியாய் உருவடுத்த நிலையில்தான், சசிகலா அதிமுக நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடனும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக பேசி, அந்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் பேசும் எல்லாரிடமும் அதிமுகவை காப்பாற்றுவோம், நான் நிச்சயம் வருவேன் என்ற உறுதிமொழியை கொடுத்து வருகிறார். சசிகலாவிடம் பேசும் அதிமுக நிர்வாகிகளை, கட்சியின் தலைமை தொடர்ந்து நீக்கி வருவதும் தொடர்கிறது. இந்நிலையில், தேனி கர்ணனுடன் அவர் தொலைபேசியில் உரையாடிய ஆடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் பேசிய விவரம் இதோ,
 
கடிதங்களைப் பார்க்கும்பொழுது கஷ்டமாக இருக்கிறது. அதனால்தான் நான் வருகிறேன் என்று சொல்கிறேன். நிச்சயமாக நான் வருவேன், கட்சி வீணாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கட்சி மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது கட்சியின் வேர்கள் தான் தொண்டர்கள், வேர்களை வெட்டுவது ஒரு கட்சிக்கு நல்லதல்ல. நிர்வாகம் தவறாக சென்று கொண்டிருக்கிறது, அந்த கட்சியை வளர்த்த நம்மால்அதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள் தொண்டர்களுக்கு நான் இருக்கிறேன் நிச்சயமாக வந்து தலைவர் அம்மா காலத்தில் எப்படி இருந்ததோ அப்படி கட்சியை வழிநடத்துவேன்.
 
ஏழை எளிய மக்களுக்கு தலைவரும் அம்மா அவர்களும் நிறைய உதவிகளை செய்து இருக்கிறார்கள்.  அம்மா சொன்ன சில திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அம்மா மறைவிற்குப் பிறகு கட்சி வேறுவிதமாக சென்று கொண்டிருக்கிறது.  கட்சியினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். கட்சி ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றுதான் நான் கூறினேன். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாமல் நாங்கள் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னவர்கள், சரி நாம் ஒதுங்கி இருந்தால் அது அவர்களுடைய ஆசைப்படி வெற்றி பெறுகிறார்களா என்று ஒதுங்கி இருந்தேன். 
 
ஜெயித்து இருந்தால் மூன்றாவது முறையாக அம்மாவின் ஆட்சி அமைந்திருக்கிறது என்ற சந்தோஷத்தில் நானும் இருந்திருப்பேன். ஆனால் அதையும் இவர்கள் செய்யவில்லை. கொரோனா காலத்தில் எனக்கு கடிதம் போட்டவர்கள் அழைத்து பேசினால் அவர்களையும் கட்சியை விட்டு நீக்கி விடுகிறார்கள். இவர்களுக்கு எந்த அளவிற்கு கட்சியை நடத்துவதற்கான திறமை இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது.  தொண்டர்கள் தான் கட்சியின் தலைமை என்று அம்மாவும் தலைவரும் அவர்கள் செயல்பட்டார்கள். அதனால்தான் தொண்டர்களை சந்திக்க வருகிறேன் என்று கூறினேன். 
 
நான்கு வருடங்களாக என்னுடைய உடல் மட்டும்தான் பெங்களூரில் இருந்தது உயிர் முழுவதும் தமிழ்நாட்டை சுற்றி தான் இருந்தது.  என்னுடைய வாழ்நாளில் 35 வருடங்களில் இவர்கள் உடனே கழித்து விட்டேன். வெளிப்படையாக எதுவும் செய்யவில்லை என்றாலும் அம்மாவுடன் இருந்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்திருக்கிறேன் நல்லதை மட்டுமே செய்திருக்கிறேன். 
 
தலைவர் மறைவுக்கு பிறகு அம்மாவுடன் எந்த அமைச்சரும் இல்லை. தொண்டர்கள் மட்டும்தான் உடன் இருந்தார்கள். தொண்டர்கள் மூலம் கட்சியை மீண்டும் அதற்கான உழைப்பை அம்மா அவர்கள் கொடுத்தார்கள். தோல்விகளை சந்தித்தோம். அதற்காக வேறு கட்சிகளுக்கு ஓட வில்லை.  எனக்கு நான்கு வருட சிறை என்று அறிவிப்பு வந்த பத்து நிமிடத்தில், இந்த ஆட்சியை எப்படி அமைப்பது நாளை பெங்களூர் செல்ல வேண்டுமே என்றுதான் நினைத்தேன். உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆட்சி அமைத்து கொடுத்து விட்டு தான் சென்றேன். 
 
அம்மாவுடைய அம்மாவை விட அதிக நாட்கள் அம்மாவை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதுதான் நான் செய்த பாக்கியம்.  கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் இருந்து சிறையில் இருந்து நாள் தோறும் விரதம் இருந்து பூஜை செய்து வந்திருக்கிறேன். தொண்டர்களை விட்டுவிடக்கூடாது தலைவரால் வளர்க்கப்பட்ட கட்சி அம்மாவால் மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை மீண்டும் செய்ய வேண்டும் என்றால் அது நம்மால் மட்டுமே முடியும் என்பது ஊரறிந்த செய்தி. தொண்டர்கள் அனைவரும் என் பக்கம் இருப்பதால் உறுதியாக இறங்கியுள்ளேன். 87 டிசம்பரில் தலைவர் மறைவுக்கு பிறகு அந்த எண்ணம் எங்களுக்குள் வந்தது தற்போது அதே எண்ணம் வந்துள்ளது அம்மா மறைவிற்கு பிறகு. நிச்சயம் செய்து முடிப்பேன். 
 
எல்லோரும் இந்த கட்சியை திரும்பி பார்த்து நல்லபடியாக கொண்டு வந்து விட்டார்கள் என்ற நிலை மிக விரைவில் வரும் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தான் கட்சியை கொண்டு செல்வேன் கவலை வேண்டாம் என உறுதியோடு கூறியுள்ளார்.