எதிரிகளுக்கு துணை போக மாட்டீர்கள் என நம்புகிறேன்.. நடவடிக்கை பாயும்.. தொண்டர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை..!

அலட்சியப்போக்கு தெரிந்தால் கடும் நடவடிக்கை பாயும் - முதலமைச்சர்..!

எதிரிகளுக்கு துணை போக மாட்டீர்கள் என நம்புகிறேன்.. நடவடிக்கை பாயும்.. தொண்டர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை..!

தொண்டர்களுக்கு கடிதம்:

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு, வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், வரும் 7-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அலட்சியமான போக்கு வேண்டாம்:

எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம் - இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள் என அமைச்சர்கள், எம்பி-எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பொறுப்பிலே இருக்கக்கூடிய திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார் முதலமைச்சர். 

கண்ணியம் குறைந்து விடக் கூடாது:

நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

கடுமையான நடவடிக்கை:

நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது என்றும், அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் தன் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

எதிரிகளுக்கு துணைப் போக மாட்டீர்கள்:

அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு, திமுகவினர் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக அரசின் செயல்பாடுகளுக்கு தடங்கலாகும் சூழலை திட்டமிட்டு உருவாக்க சில அரசியல் கட்சிகளும், அவர்களின் பின்னணிக் குரலாகச் செயல்பட நினைப்போரும் காத்திருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்:

நாம் பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி-ஒட்டி, திரித்து மோசடி செய்து, அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க பெரும்பாடுபடுவதாகவும், அதனை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.