தடம் மாறுகிறாரா ஸ்டாலின்?

திமுக - பாஜக சமீபத்திய நிகழ்வுகள், ஸ்டாலின் தன்னுடைய பாஜக எதிர்ப்பு பாதையில் இருந்து தடம் மாறுகிறாரோ என்ற விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.

தடம் மாறுகிறாரா ஸ்டாலின்?

செஸ் ஒலிம்பியாட்:

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்கள்:

தம்பி சின்னம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு விளம்பரங்கள் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அந்த பேனர்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை. பிரதமரின் புகைப்படம் இடம் பெறாததை குறிப்பிட்டு, அனைத்து விளம்பர பேனர்களிலும் மோடியின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என, பாஜகவினர் சமூக வலைத்தளங்களில்  வீடியோ பதிவிட அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடியின் புகைப்படம் அழிப்பு:

பாஜகவினரின் வீடியோ வைரலான நிலையில், தமிழ்நாடு முழுவதும் விளம்பர போஸ்டர்களில் மோடியின் படம், பாஜக கட்சியினரால் ஒட்டப்பட்டது. அவ்வாறு ஒட்டப்பட்ட மோடியின் புகைப்படத்தை ஸ்பிரே கொண்டு தந்தை பெரியார் திராவிட முனேற்றக் கழகத்தினர் அழிக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.  

தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது:

புகைப்படத்தை ஒட்டிய பாஜகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மோடியின் புகைப்படத்தை அழித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டது, பாஜகவை எதிர்க்கும் ஸ்டாலின் அரசு மீது  சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோ பேக் மோடி:

மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கோ பேக் மோடி என்ற ஹாஸ்டேக் வைரலாக நிலையில், ட்விட்டரில் பிரதமருக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவோர் மீது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை  பொறுத்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறி இருந்தார். 

கோ கோ மோடி; கம் கம் மோடி :

ஜூலை 28 ஆம் தேதி நடந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் "நாங்களும் ஆளும் கட்சியாக இருந்த போது பிரதமர் தமிழ்நாடு வரும் போதெல்லாம் கோ கோ மோடி என்றார், தற்போது அவர்கள் ஆளும் கட்சியான பின்னர் கம் கம் மோடி என்கிறார்" இது தான் அவர்களின் ரைம்ஸாக உள்ளது எனக் கூறி இருந்தார். அவர் சொன்னதை உறுதிப்படுத்தும் விதமாகவே மேல சொன்ன நடவடிக்கை பார்க்கப்பட்டது.

மோடி - ஸ்டாலின் நெருக்கம்:

ஜூலை 28 ஆம் தேதி நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியின் பொது மேடையில் பிரதமர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நெருக்கமாக இருந்ததை காண முடிந்தது. 

மோடி பெருமிதம்:

செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழா மேடையில் பேசிய பிரதமர், தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட்டை ஏற்பாடு செய்து ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க செய்துள்ளார் ஸ்டாலின். மிகக் குறைவான நேரத்தில் இவ்வளவு அற்புதமான ஏற்பாட்டை செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள் எனக் கூறி இருந்தார்.

ஸ்டாலின் உரை:

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா மேடையில் பேசிய ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்காக பிரதமரை நேரில் சென்று அழைக்க இருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக செல்ல இயலாததால் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நிலைமையை எடுத்து சொன்னேன். பெருந்தன்மையோடு அதை ஏற்றுக்கொண்டு நிச்சியம் சென்னை வருவதாக பிரதமர் கூறினார். அவருக்கு நன்றி" எனக்கூறி இருந்தார்.

கடந்த முறை நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்ச்சித்ததாக இணையதளத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த முறை பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டியதும், ஸ்டாலின் தடம் மறுகிறாரா? ஆளும் கட்சியாக இருப்பதால் பாஜக உடன் நெருக்கம் காட்டுகிறாரா? என அரசியல் அரங்கில் விவாதங்கள் துவங்கியுள்ளன.