ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தின் ஒரு பகுதியா தொடர் பதவி விலகல்கள்???

ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தின் ஒரு பகுதியா தொடர் பதவி விலகல்கள்???

இந்தியாவின் மக்களை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்டதே இந்திய தேசிய காங்கிரஸ்.  தொடங்கப்பட்ட காலக்கட்டத்திலிருந்தே கட்சிக்குள் பல பிரிவினைகளை கண்டது.  அதிருப்தியாளர்கள் கட்சியை விட்டு விலகுவதும் மீண்டும் இணைவதும் வாடிக்கையான ஒன்று.  கட்சி தொடங்கிய காலத்திலில் அதன் உறுப்பினர்களாக இணைந்தவர்கள் இன்றும் அதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.  பல அனுபவங்களை பெற்று கட்சிக்கு சிறந்த வழிகாட்டிகளாக செயல்பட்டும் வந்துள்ளனர்.  சில சமயங்களில் அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படும்போது கட்சியை விட்டு வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது.

காங்கிரஸின் பிரிவினை கட்சிகள்:

மோதிலால் நேரு, சி. ஆர். தாஸ் அவர்களால் 1923ல் தொடங்கப்பட்ட சுயராஜ்ய கட்சி முதல் 2021ல் பஞ்சாப்-ல் தொடங்கப்பட்ட பஞ்சாப் லோக் காங்கிரஸ் வரை இந்த பட்டியல் நீளுகிறது.  ஆனால் அந்த பிரிவினை காங்கிரஸ் கட்சிகளுள் பெரும்பான கட்சிகள் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்தே செயல்பட்டு வருகின்றன.

நேற்று சரத் பவார்:

காங்கிரஸ் கட்சியின் பெரும் மூத்த தலைவரான சரத் பவார் 1956ல் காங்கிரஸ் இளைஞரணியில் இணைந்தார்.  அதில் சிறப்பாக பங்காற்றிய சரத் பவார் 1964 இல் அதன் தலைவராக ஆனார்.  1967 இல் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினராக 27 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸை எதிர்க்கும் விதமாக 1978ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்(சோஷலிஸ்ட்) என்ற கட்சியை உருவாக்கினார்.  


அதன் பின்னர் மகாராஷ்டிராவின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.  சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் வலுவான கட்சியாக எழுச்சி பெற்றதைத் தொடர்ந்து 1986ல் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.  ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து சோனியா காந்தி கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்பதை எதிர்த்தார் சரத் பவார். வேற்று நாட்டை சேர்ந்த ஒருவர் இந்திய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பதா என்ற விரக்தியில் 1999ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற புது கட்சியை தோற்றுவித்தார்.  

அதே ஆண்டின் பிற்பகுதியில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பானமை பெறாததால் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார் சரத் பவார்.  2004ம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து இன்று வரை ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

இன்று குலாம் நபி ஆசாத்:

குலாம் நபி ஆசாத் 1970 களில்  ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.  முன்னாள் ஒன்றியஅமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், ஜம்மு காஷ்மீரில் அக்கட்சியின் பிரபலமான முக்கியத்துவம் வாய்ந்த முகமாகவும் இருந்தார். 

மூத்த தலைவர்களின் கருத்துகளை கட்சி ஏற்பதில்லை எனவும், ராகுல் காந்தியின் வழிகாட்டுதல் படியே கட்சி செயல்பட்டு வருவதாகவும் குலாம் நபி விமர்சித்திருந்தார்.  கட்சியின் வளர்ச்சியில் பின்னிருந்தவர்களை கட்சியின் தலைமை புறக்கணிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார் குலாம் நபி ஆசாத்.

சோனியா காந்தியின் ஐக்கிய மக்கள் கூட்டணியை ரிமோட் கண்ட்ரோல் மாடல் என்று அழைத்துள்ளார் குலாம் நபி ஆசாத்.  இன்னும் மோசமானது,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஒருமைப்பாட்டை தகர்த்த 'ரிமோட் கண்ட்ரோல் மாடல்' இப்போது இந்திய தேசிய காங்கிரஸுக்குள்ளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் சோனியா காந்தி ஒரு பெயரளவிலான தலைவர் எனவும் கட்சியின் ​​அனைத்து முக்கியமான முடிவுகளையும் ராகுல் காந்தி  அல்லது அவரது காவலர்கள் மற்றும் ராகுலின் தனிப்பட்ட உதவியாளர்கள் எடுக்கின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

கடந்த ஆண்டு குலாம் நபி ஆசாத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக் காலம் முடிவடைந்த பிறகு நடந்த பிரியாவிடை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி அவரை மிகவும் புகழ்ந்து பேசியிருந்தார் என்பதும் குலாம் நபி ஆசாத் பின்னர் ஜம்முவில் ஆற்றிய ஒரு உரையின் போது பிரதமர் மோடியை,  உயர் பதவியை அடைந்த பிறகும் தனது வேர்களை அவர் மறக்கவில்லை என மோடியை குலாம் நபி ஆசாத் புகழ்ந்து பேசியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பலவீனம் அடையுமா காங்கிரஸ்?

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி கொண்டே இருக்கின்றனர்.  இந்த பதவி விலகல்கள் தொடர்ந்து கொண்டே இருக்குமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.  மூத்த தலைவர்களை இழந்த காங்கிரஸ் பலவீனமாகுமா இல்லை இளைஞர்களால் மீண்டும் கட்டமைக்கப்ப்டுமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளதாக தெரிகிறது.

தொடர் விலகல்கள் காங்கிரஸ்ஸின் திட்டமா?

மாநிலங்களில் சிறப்பான செல்வாக்கை பெற்றுள்ள தலைவர்கள் காங்கிரஸ்ஸிலிருந்து வெளியேறுவதும் புதிய கட்சியை உருவாக்குவதும் வெற்றி பெற்ற பின் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு வலுவான அமைப்பை உருவாக்கவே குலாம் நபி ஆசாத் திட்டமிட்டே பதவி விலகி உள்ளார் என்ற கருத்தும் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.  வரவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தலில் குலாம் நபி ஆசாத் வெற்றி பெறுவாரா?  மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து தான் கவனிக்க வேண்டும் என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: தோல்வியுற்றதா காங்கிரஸ் அரசாங்க நீதித்துறை!!!!!வெற்றி பெறுமா மோடி அரசாங்க நீதித்துறை!!!!!