தமிழகத்தில் ஜிகா வைரஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? விவரம் உள்ளே!

தமிழகத்தில் ஜிகா வைரஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? அதற்கு  அறிகுறிகள் என்னென்ன ? அதனை தடுப்பதற்கு பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவரத்தை தற்போது பார்க்கலாம்…

தமிழகத்தில் ஜிகா வைரஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? விவரம் உள்ளே!

ஜிகா வைரஸ் என்பது புதுவகையான வைரஸ் கிடையாது. முதல்முதலில் ஜிகா வைரஸ் 1947ஆம் ஆண்டு உகண்டா நாட்டில் குரங்கிற்கு கண்டறியப்பட்டது.  அதனைத் தொடர்ந்து 1952-ஆம் ஆண்டு மனிதர்களுக்கு ஜிகா வைரஸ் இருப்பதும் அதிலும் கொசுக்களிடம் இருந்து தான் இந்த வைரஸ் பரவுகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்தது. அதன் பிறகு 2016 -17 ஆகிய ஆண்டுகளில் குஜராத், மத்திய பிரதேஷ், உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸினால் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியது.  அப்போது தமிழகத்தில் அஞ்செட்டி என்ற கிராமத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் ஏற்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளாக ஜிகா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆந்திரா, அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்  ஜிகா வைரஸ் பாதிப்பு தொடங்கியிருக்கிறது.

மேலும், தமிழகத்திற்கு இதன் பாதிப்பு வருவதற்கு முன்னதாகவே சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் 2660 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தற்போது வரையிலும் யாருக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை என மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

ஜிகா வைரஸ் தொற்று டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு மூலம் தான் வருகிறது. இந்த வைரஸால் இறப்பு அதிக அளவில் இருக்காது ஆனால் விளைவுகள் அதிகமாக இருக்கும். அதனை தடுக்க பொதுமக்கள் நல்ல தண்ணீரில் கொசுவை தங்க விடாமல் பார்த்து கொள்ளவேண்டும். எந்த நோயாக இருந்தாலும் மருத்துவரை அணுகினால் மட்டும்தான் அது டெங்கு, ஜிகா வைரஸ் உள்ளிட்ட எந்த வைரஸ் என்று தெரியவரும் என்றார். பொதுவாக ஜிகா வைரஸ்க்கு காய்ச்சல், தசை வலி, சரும பாதிப்பு, தலைவலி, மூட்டு வலி, சிவந்த கண்கள் உள்ளிட்ட டெங்கு வைரஸ் இருக்கும் அறிகுறிகள் தான் இதற்கும் வருகிறது என கூறினார்.

பெரும்பாலும் ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது அப்படி அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது பிறக்கும் குழந்தைகள். மைக்ரோஃபாலி போன்ற தலையின் அளவு வழக்கமான அளவை விட சிறியதாக இருத்தல், மூளைப் பகுதி போதுமான வளர்ச்சியடையாததே காரணமாகிறது. ஆனால் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு அது போன்ற பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், பொதுமக்கள் ஜிகா வைரஸ் வரமால் தடுக்க நல்ல தண்ணீரில் கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும், வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதிக நீர், பழச்சாறுகள் உட்கொள்ள வேண்டும் காய்ச்சல் மற்றும் உடல் வலிகளுக்கு மருந்து சாப்பிடலாம். ஆனால் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.