துணை முதல்வர் பதவி கொடுத்தே ஆகணும்! ரங்கசாமிக்கு புது டார்ச்சர் கொடுக்கும் பாஜக!

புதுச்சேரியில் துணை முதல்வர், 2 அமைச்சர்கள் பதவியை பாஜக கேட்பதால் அங்கு அமைச்சரவை பட்டியல் தயாராவதில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது.

துணை முதல்வர் பதவி கொடுத்தே ஆகணும்!  ரங்கசாமிக்கு புது டார்ச்சர் கொடுக்கும் பாஜக!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர் ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ம் தேதி பதவியேற்றார். இவர் பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது வரை பாஜகவுடன் இணக்கமான சூழல் நிகழவில்லை.  

இதற்கடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி சென்னையி சிகிச்சை பெற்ற பின், தங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு முதல்வர் ரங்கசாமி மறுப்பு தெரிவித்ததால், 2 முக்கிய அமைச்சரவை பதவி, சபாநாயகர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தது பாஜக.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி கடந்த 4-ம் தேதி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது தற்காலிக அமைச்சரவை பட்டியலை தயார்படுத்திகொடுக்கும்படி அரசு சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது.

இந்த நிலையில்தான் உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு சபாநாயகராக தேர்ந்தெடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக, மீண்டும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச  ராஜீவ் சந்திரசேகரை அனுப்பி வைத்தனர்.  இந்த சந்திப்பின் போது காட்டமாக பேசிய ராஜீவ் சந்திரசேகர், பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி, 2 அமைச்சர்கள் பதவி வேண்டும் என சொல்லிவிட்டு புறப்பட்டார்.

இதனால் புதுச்சேரியில் பாஜக-என்.ஆர். கட்சிகளிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு அமைச்சரவை அமைப்பது இழுத்துகொண்டே செல்கிறது.