”தீக்குளித்து வான் பறக்கும் பீனிக்ஸ் பறவை போல......” பொன்விழா கொண்டாடும் அ.தி.மு.க...!!!

”தீக்குளித்து வான் பறக்கும் பீனிக்ஸ் பறவை போல......” பொன்விழா கொண்டாடும் அ.தி.மு.க...!!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா நிறைவு விழா தமிழ்நாடெங்கும் அ.தி.மு.க. தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவின் வரலாற்றை அறிந்து கொள்வோம்... 

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி பொறுப்பேற்ற நிலையில், கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். வரவு செலவு கணக்கு கேட்ட காரணத்தினால் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். லட்சக்கணக்கான தொண்டர்கள் எம்ஜிஆர் பின்னால் அணிவகுக்க, 1972 அக்டோபர் 17-ம் தேதியன்று அதிமுக எனும் பேரியக்கத்தை தொடங்கினார் எம்ஜிஆர். 

தொடங்கிய ஆறே மாதத்தில் 1973 மே மாதம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாயத்தேவரை துணிந்து நிறுத்தினார் எம்ஜிஆர். நினைத்ததை நடத்தி முடிப்பவன் என்ற அவரது திரைப்படத்திற்கு ஏற்ப ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து அதிமுக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

தொடர்ந்து 1977-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது அதிமுக. சென்னை அண்ணாசாலையில் பல்லாயிரம் பேர் திரண்ட பொதுக்கூட்டத்தில் பதவியேற்பு விழாவை நடத்தி புதுமையை புகுத்தினார் எம்ஜிஆர்.  

கட்சி தொடங்கி தேர்தலில் அபார வெற்றி பெற்ற பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு இன்னல்கள் படையெடுக்கத் தொடங்கியது. ஜெயலலிதாவுக்கு கட்சியில் அங்கீகாரம் வழங்கப்படுவது குறித்து உட்கட்சி நிர்வாகிகளே எதிர்த்து வந்தனர். இருப்பினும் அனைத்தையும் மீறி தனக்கு பிறகு அரசியல் வாரிசாக அறிவித்து கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்தார். 

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு சிதறிப்போன அ.தி.மு.க. வை ஒன்று திரட்டி இரும்பு அரணாய் மாறினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரிடம் இருந்த அதே வீரமும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் ஜெயலலிதாவிடம் காணப்பட்டதால் அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் உடைப்பதற்கு முடிந்திருக்கவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவு கட்சிக்குள் சலசலப்பை எப்படி ஏற்படுத்தியதோ, அதே போல ஜெயலலிதாவின் மறைவால் சர்ச்சையும், சலசலப்பும் உண்டானது. 

ஒரு பக்கம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இன்னொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம், மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி என மும்முனைகளில் இருந்தும், கருத்து மோதல்கள் எழுந்தாலும், இதோடு அ.தி.மு.க. முடிந்து விடும் என பல கட்சிகள் நினைத்தே வந்தது. ஆனால் அவ்வாறு நினைப்பவர்களே இன்று வரை தோல்வியடைந்து வருகின்றனர். 

என்ன இடர்பாடுகள் வந்தாலும், நெருப்பு தம்மை சூழ்ந்தாலும், தீக்குளித்து வான் பறக்கும் பீனிக்ஸ் பறவை போல உயர உயர பறந்து கொண்டே இருக்கிறது அ.தி.மு.க. எனும் பேரியக்கம். இன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா கண்ட அ.தி.மு.க. வைரவிழா, பவளவிழா கடந்து, நூற்றாண்டு விழா கொண்டாடும் என்பதில் ஐயமில்லை. 

                                                                                                                               -நப்பசலையார்

இதையும் படிக்க:   டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி..!!