அன்று முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை : இன்று மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சே !!

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த அதே மே மாதத்திலேயே ஆட்சியில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார் மகிந்த ராஜபக்சே. தவறுக்கான தண்டனையை காலம் வழங்கிய நிகழ்வு.

அன்று முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை : இன்று மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சே !!

மே-18, உலகத் தமிழர்களின் உள்ளமெல்லாம் கருப்பு நாளாக கல்வெட்டுப் போல் பதிந்துள்ளது.  அன்றுதான் ஈழத் தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை லட்சம் பேர் இலங்கையின் கொத்து குண்டுக்கு பலியானார்கள். விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்காலில்தான் இந்த கொடூரம் நிகழ்ந்தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்த அரக்கச் செயலை அரங்கேற்றினார்.

இன்று உக்ரைனுக்காக உருகும் பல்வேறு நாடுகளும் அன்று இலங்கை இனப்படுகொலையை கண்டிக்கவில்லை என்பதுடன் கண்டு கொள்ளவும் இல்லை. உக்ரைனின் புச்சா நகர் வீதியில் சிலர் இறந்து கிடக்கும் காட்சிக்கே கொந்தளிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரே இடத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அமைதி காத்தன. இலங்கை சென்ற அப்போதைய ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனும் பெரிதாக ஏதும் செய்யவில்லை.  எஞ்சி இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பது,  நிவாரணம் என இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள்  உதவிக் கரங்களை நீட்டியதே தவிர ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிப்பதற்கான அழுத்தங்களைத் தரவில்லை.

ஆனால் காலம் தரும் தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது  என்பதை மீண்டும் இன்று உலகிற்கு உணர்த்துகிறது இலங்கை. புலிகளை அழித்து விட்டார் என்று உச்சாணிக் கொம்பில் அமர வைத்த மக்களே, இன்று மகிந்த ராஜபக்சேவை ஓட ஓட விரட்டியடித்துள்ளனர். அன்று தாக்குதலை நிறுத்துங்கள் என்று ஈழத்தமிழர்கள் கதறியதை அலட்சியப்படுத்தியது போல் இன்று ஆட்சியை விட்டு  வெளியேறு என்று மக்கள் கூறியதையும் அலட்சியப்படுத்தியதால் பற்றி எரிகிறது இலங்கை. தப்பி ஓடுகிறார் ராஜபக்சே. ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்களின் சாபம்தான் இன்று ராஜபக்சே வகையறாக்களையே இலங்கை அரசியலில் இருந்து அகற்றுகிறது.    

ராஜபக்சே போன்றே அவரதும் சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் குறி வைத்து விட்டனர். இனி அவருக்கும் அழிவுகாலம்தான். பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தொடரப்பட்ட மக்கள் போராட்டம் இன்று ராஜபக்சேக்களுக்கு சாவு மணி அடிக்கும் போராட்டமாக மாறி விட்டது. ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்ற பாவத்தின் சம்பளத்தை உரியவர்களுக்கு காலம் வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதே  இலங்கை உலகிற்கு உணர்த்தும் பாடம்.