NO MEANS NO... சமுதாயத்தின் மீதான பெண்களின் பார்வையை சரியாக்கிய ஒரு படம்..!

நடிகர் அஜித்தின் நடிப்பையும், கேரியரையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது..!

NO MEANS NO... சமுதாயத்தின் மீதான பெண்களின் பார்வையை சரியாக்கிய ஒரு படம்..!

NO MEANS NO.. இதை எப்படி சொல்வது எனத் தெரியாமல் பெண்கள் இருந்த காலகட்டத்தில் நேர்கொண்ட பார்வை ஆண்கள் மத்தியில் உரக்கச் சொன்னார் அஜித் குமார். அதிலிருந்து தான் ஆண்களுக்கு இங்கு பல உண்மைகள் புரிய வந்தது என்று கூட கூறலாம். 

நேர்கொண்ட பார்வை: 2017-ம் ஆண்டு தீரன் அதிகாரன் ஒன்று என்ற ஒரு சிறப்பான கதைக் களத்தை கொடுத்திருந்த இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக எப்படியான படத்தை கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்த காலகட்டத்தில், சரியாக இரண்டு வருடத்திற்கு பிறகு அஜித்குமாருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கியிருந்தார் ஹெச்.வினோத். பிங்க் என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க, முதன்முறையாக போனிகபூர் தமிழில் இப்படத்தை தயாரித்தார். 

ஓரே வருடத்தில் 2 ஹிட்: 2019-ம் வருடத்தின் தொடக்கத்தில் விஸ்வாசம் என்ற ஒரு செண்டிமெண்ட் படத்தை கொடுத்து வெற்றியில் திழைத்திருந்தார் அஜித். அடுத்ததாக இவரது அவதாரம் எப்படியாக இருக்கும் என எதிர்பார்த்திருந்த வேளையில், யாருமே எதிர்பாராத வண்ணம், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு சென்றிருந்தார் அவர். ஒரே வருடத்தில் இருவேறு படங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஒரு படி மேலே சென்றிருந்தார் அஜித். குறிப்பாக பெண்கள் மத்தியில். 

பெண்கள் மீதான பார்வை: தொழில்நுட்பங்களில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் வளர்ச்சி என மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் வளர்ந்து கொண்டே சென்றாலும் கூட, பெண்கள் மீதான பார்வையிலும், சிந்தனையிலும் மட்டும் இன்னும் 50 ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கிறது நமது சமுதாயம் என்பது வேதனையான உண்மை. அதென்ன அப்படி சொல்கிறீர்கள்? பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்கு செல்கிறார்கள், விருப்பமான உடை அணிகிறார்கள் இத்தனை சுதந்திரம் அவர்களுக்கு இருக்கே என்று நீங்கள் கூறலாம்..

ஆனால் அவற்றை நீங்கள் அவளுக்கு தரவில்லை. அவளிடம் இருந்த உரிமையை நீங்கள் பிடித்து வைத்திருந்தீர்கள், அதிலிருந்து அவர்கள் தங்களை அவிழ்த்து கொண்டு வெளியே வந்தார்கள். அப்படி வந்தவர்களையும் இந்த சமுதாயம் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. மார்டன் ஆடை அணிந்திருந்தால், இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தால், அதிகளவில் சம்பளம் வாங்கினால், சினிமாத் துறையில் வேலை பார்த்தால், உயர் பதவிகளுக்கு சென்றால் இப்படி பெண்கள் வளர்ந்தால் அவர்களுக்கு உடனே நடத்தை கெட்டவள் என்ற பெயரை பச்சைக்குத்திக் கொண்டே தான் இந்த சமுதாயம் இருந்து வருகிறது. இதனை யாராலும் மறுக்கவே முடியாது. 

கோணத்தை மாற்றிய நேர்கொண்ட பார்வை: அப்படிப்பட்ட ஆண்களின் பார்வையையும், சமுதாயத்தின் பார்வையையும் சற்று சிந்திக்க வைத்தது நேர்கொண்ட பார்வை திரைப்படம். ஒரு பெண் இரவில் ஆண் நண்பர்களுடன் வெகு நேரம் வெளியே இருக்கிறாள், அரைகுறை ஆடையோடு மது குடிக்கிறாள், தனியே சம்பாதித்து நண்பர்களுடன் வசித்து வருகிறாள் என்றாள் அவள் ஒரு நடத்தை கெட்டவள் அல்லது படுக்கைக்கு இணங்குவாள் என்பது அர்த்தம் அல்ல என்பதை ஊருக்கு உரக்கச் சொன்னது இப்படம். 

NO MEANS NO: அதுமட்டுமின்றி சமுதாயத்தில் ஒரு நீண்ட நெடிய பழக்கம் உள்ளது. அதாவது ஒரு ஆணுக்கு பெண் காதலியாகவோ, மனைவியாகவோ, அல்லது பாலியல் தொழிலாளியாகவோ இருந்தால் நிச்சயம் ஆணின் ஆசைக்கு இணங்க வேண்டும். அதில் அப்பெண்ணுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும். இந்த கண்மூடித்தனமான ஒரு எழுதப்படாத விதியை உடைத்தெறியும் விதமாக இப்படத்தில் அஜித்குமார் பேசிய no means no என்ற வசனம் மிகவும் பிரபலமடைந்தது. அவள் உனது மனைவியாக இருந்தாலும், ஏன் பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவள் வேண்டாம் என்று சொன்னாள் அது வேண்டாம் தான். ஒருவேளை அவளது விருப்பத்தை ஆண் மதிக்கவில்லை என்றால் அதுவும் ஒரு உரிமை மீறல் மற்றும் வன்முறை என்பதை அழுத்தம் திருத்தமாக பதியவைத்திருந்தது இப்படம். 

3 ஆண்டு கொண்டாட்டம்: இப்படி பெண்கள் மத்தியிலும், ஆண்கள் மத்தியிலும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்றும் இப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போது, பல பெண்கள், அதிலும் குடும்பத்தை விட்டு வெளியூர்களில் வேலை செய்யும் பெண்கள் நிச்சயம் பார்த்து ஒரு நிமிடம் உள்ளுக்குள் பூரித்து போவர். அப்படி அஜித் வாழ்க்கையிலும் ஹெச்.வினோத் வாழ்க்கையிலும் ஒரு சிறப்பான படமாக இருக்கும் நேர் கொண்ட பார்வை.