மோடிக்கு மாற்றாக நேரு… ஒற்றை இந்தியா சாத்தியமில்லை… மீண்டும் அழுத்தமாக பேசிய ஸ்டாலின்…  

கூட்டணி குறித்து திட்டவட்டமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

மோடிக்கு மாற்றாக நேரு… ஒற்றை இந்தியா சாத்தியமில்லை… மீண்டும் அழுத்தமாக பேசிய ஸ்டாலின்…  

கூட்டாட்சி அரசியல்:

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மிகப் பெரும் வெற்றி பெற்றது திமுக அரசு. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஸ்டாலின். அதிலிருந்தே கூட்டாட்சி தத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் தான், கேரளாவின் புகழ்பெற்ற மலையாள மனோரமா ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று, கூட்டாட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், கூட்டாட்சி கருத்தியலும் விடுதலையால் பெற்ற சமஉரிமைகளும் அனைத்து விதமான முற்போக்கு சிந்தனையால் பெற்ற வளர்ச்சிகளுமே இந்தியாவை இந்த அளவிற்கு வளர்த்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

நேரு குறித்து பெருமிதம்:

இந்தியாவின் வேற்றுமைகளை மதிப்பவராக பிரதமர் நேரு இருந்தார். பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரி மாகாணங்களை உரிவாக்கிக்கொடுத்தார். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை அவர்கள் மீது இந்தி திணிக்கப்படாது என்ற உறுதி அளித்தார் நேரு. மதச்சார்ப்பற்ற மனிதராக அவர் இருந்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். அனைத்து தரப்பு கருத்துக்களும் விவாதிக்கப்படும் இடமாக நாடாளுமன்றத்தை உருவாக்கினார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். இதே கருத்துக்களை மேலும் மேலும் அதிகப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் காப்பது தான் இந்தியவை காப்பாற்றுவது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையோடு இருப்பதற்கு நமது சிந்தனை இருக்க வேண்டும். 


ஒன்றிய அரசுகளால் ஆக்கப்பட்டது தான் இந்தியா:

இந்தியா ஒரு ஒற்றை அரசு இல்லை. ஒன்றிய அரசுகளால் ஆக்கப்பட்டது தான் இந்தியா. இந்தியாவில் உள்ள எல்லா மாகாணங்களையும் காக்க வேண்டும். அது தான் இந்தியாவை காப்பதாகும். இந்தியாவிற்கு ஒரு தேசிய மொழி சாத்தியம் இல்லை. எல்லோருக்கும் ஒரு மதம் என்பதை அங்கீகரிக்க முடியாது. இந்தியாவில், உணவு, உடை என எல்லாவற்றிலும் வித்தியாசம் உண்டு. வலிமையான அதிகாரம் பொருந்திய தன்னிறைவு பெற்றவையாக மாநிலங்கள் இருப்பது இந்தியாவிற்கு பலம் தான் பலவீனம் இல்லை எனக் கூறினார். 

நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறி?:


கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்க வேண்டும். ஒரே நாடு என மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. பல்வேறு சிந்தனை களமாக நாடாளுமன்றம் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் ஜனநாயக உரிமையைக் கட்டமைத்தார்கள். ஆனால், தற்போது, நாடாளுமன்றத்த்கில் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே உரிமைகள் மறுக்கப்படுகின்றன. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பேச கூட உரிமை இல்லை. ஜி.எஸ்.டி தொகை குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பது இல்லை. தேசிய கல்வி கொள்கை 2022 மக்களை பாதிக்கிறது. 


பாஜக ஆளுநர்கள் மூலமாக தனி அரசை நடத்துகிறது:


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் மூலமாக பாஜக தனி அரசை நடத்துகின்றது. இந்தியாவின் மிக நீண்ட வரலாறும் சகோதர உணர்வும் இந்தியாவை காக்கும் என நம்புவதாக ஸ்டாலின் கூறினார். இந்தியாவிற்கு ஜனநாயகமே பொறுத்தமானது என நேரு சொன்னார். அதை பாதுகாக்க என்றும் போராடுவோம் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 

ஒரே நாடு, ஒரே மொழி சாத்தியம் இல்லை:

இந்தியா பல்வேறு மொழி பேசக்கூடிய மக்கள் வாழக்கூடிய நாடு. இங்கு, ஒற்றை மொழி என்பது தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ அரசு மொழியாகவோ ஆக முடியாது. அப்படி இருந்தால் காலப்போக்கில் மற்ற மொழிகள் அழிந்துவிடும். பெற்ற சுதந்திரத்திற்கு பின்ன உரிமைகளை பறிப்பது தவறானது. இது சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு செய்யும் துரோகம் என ஸ்டாலின் கூறினார்.  

தேர்தலுக்கான கூட்டணி அல்ல; கொள்கைக்கான கூட்டணி:

கடந்த சில நாட்களாக திமுக, பாஜகவுடனான எதிர் நிலைப்பாட்டில் இருந்து விலகி இணக்கம் காட்டுவதாக பேசப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழா நிகழ்ச்சி மேடையில் ஸ்டாலின் - மோடி நெருக்கும் குறித்து பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது. பாஜக - திமுக கூட்டணி சாத்தியமா என்று கூட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. 
அதன் அடிப்படையில், கூட்டணி குறித்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழ்நாட்டில் திமுக  தலைமையிலான கூட்டணி தொடரும். தேர்தலுக்கான கூட்டணி அல்ல; கொள்கைக்கான கூட்டணி; லட்சிய கூட்டணி என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த பதில், திமுக கூட்டணியில் மனக்கசப்பு இருப்பதாக எழும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.