TamilsareNotHindus ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வரும் நெட்டிசன்கள்.. என்ன தான் பிரச்னையாம்?

ராஜராஜசோழன் தமிழரா? சைவ பிரிவை சேர்ந்தவரா? இந்துவா?

TamilsareNotHindus ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வரும் நெட்டிசன்கள்.. என்ன தான் பிரச்னையாம்?

பொன்னியின் செல்வன்:

கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சக்கைப் போடு போட்டு வரும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, பிரகாஷ்ராஜ், த்ரிஷா என பலரது நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கல்கியின் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

நாமமா? பட்டையா?

படம் வெளியான 5 நாட்களிலேயே 100கோடி ரூபாயை வசூல் செய்து தொடர்ந்து அதிரடி காட்டி வரும் பொன்னியின் செல்வன் படம், சர்ச்சையில் சிக்குவதிலும் தவறவில்லை. படம் வெளியாவதற்கு முன்பு டிரைலரில் கரிகாலனாக நடித்திருந்த விக்ரமிற்கு திலகம் மட்டுமே இட்டிருப்பதாகவும், அவர் ஒரு சைவ சமயத்தை சேர்ந்தவர் எப்படி திலகமிட முடியும் என்ற சர்ச்சை எழுந்தது. 

திருப்தி அளிக்கவில்லை:

அதன் பிறகு CG மூலம் அவருக்கு பட்டை இடப்பட்டது. படம் வெளியான பிறகு, பொன்னியில் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு திருப்தி அளிக்கும் படியாக படம் அமையவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. கதையில் பல திரிபுகள் இருந்ததாகவும் நடிகர்கள் நாவலில் கூறப்பட்டிருந்ததைப் போன்ற தோற்றத்தில் இல்லை எனவும் பல 
எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. 

வெற்றிமாறனின் கருத்து:

இவை ஒருபுறம் என்றால், பொன்னியில் செல்வனின் நாவல் மாந்தரான ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவரா? என்ற கேள்வியும், சர்ச்சையும் தற்போது தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்து பேசியிருந்தது தான் இத்தனைக்கும் காரணமாய் அமைந்தது. 

கொந்தளித்த இந்து அமைப்பினர்:

அந்த விழாவில், அவர் ராஜராஜ சோழனை இந்துவாக காட்டுவது போன்று தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இவரது இந்த பேச்சு பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களை கோபமாக்கியது. உடனே சமூக வலைதளங்களில் வெற்றிமாறனை பற்றி அவதூறாக பேச ஆரம்பித்துவிட்டனர். 

ராஜராஜசோழன் இந்து இல்லை:

ஆனால் வெற்றிமாறன் கூறியதன் பொருள், ராஜராஜ சோழனின் காலகட்டத்தில் இந்து என்ற மதமே கிடையாது. அப்போது வரை சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் தான் இருந்தது என்பதை குறிக்கும் விதமாக பேசியிருந்தார். ஆனால் வழக்கம் போல இந்து முன்னணி அமைப்பினரும், பாஜகவினரும் அதனை ஏற்க மறுத்து ராஜராஜசோழன் இந்து தான் என வாதிட்டு வருகின்றனர். 

வெற்றிமாறனுக்கு ஆதரவு:

மற்றொருபுறம் வெற்றிமாறனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்ணைப்பாளர் சீமான், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் கருணாஸ் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், மக்கம் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் ராஜராஜ சோழன் காலத்தில் சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் தான் இருந்தது. வெள்ளைக்காரன் வைத்த பெயர் தான் இந்து எனக் கூறியிருந்தார். 

TamilsareNotHindus:

இந்த நிலையில் ட்விட்டரில் #TamilsareNotHindus என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. சமீப காலமாகவே தமிழர்கள் அனைவரும் இந்துக்களாகத் தான் இருக்க முடியும் என பாஜக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்களும், தமிழர்களும் இந்துக்களும் ஒன்றில்லை தமிழர்களுக்கு மதமே கிடையாது என ஒரு தரப்பினும் மாறி மாறி சமூக ஊடகங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.