கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தவறே செய்யவில்லையா?

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தவறே செய்யவில்லையா?

தமிழகத்தில் உள்ள 43 அரசு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் லஞ்சப் புகாரில் சிக்கி இருப்பதாகவும், அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொண்டுவருவதாக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2020-21 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது எவ்வித வழக்குகளும் பதியப்படவில்லை என்றும், மற்ற துறைகளை சார்ந்த அதிகாரிகள் மீது இரண்டு ஆண்டுகளில் 553 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2020-21 ஆண்டை பொறுத்தவரை 116 பேர் லஞ்ச ஒழிப்பு துறையால் பொறி வைத்து பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்து 178 அரசு ஊழியர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, அதில் 294 அரசு ஊழியர்கள் மீது முதற்கட்ட விசாரணையும், விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையை பார்த்தோமே ஆனால் முந்தைய ஆண்டுகளை விட கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து 247 ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று பத்திரப்பதிவு துறையை சேர்ந்த 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய 195 பேரின் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்திற்கு அதிகளவு வருமானம் ஈட்டி தரக்கூடிய துறையான டாஸ்மாக்-கில் இரண்டு ஆண்டுகளில் லஞ்சம் மற்றும் ஊழல் செய்த வழக்கில் 67 ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையை பொறுத்தவரை முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் லஞ்சப் புகார் குறைந்திருப்பதாகவும் , 35 காவலர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் கருவூல கணக்குதுறையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது எவ்வித ஊழல் மற்றும் லஞ்ச புகார் குறித்தும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறியுள்ளனர். 2019-20 ஆண்டுகளில் பதியப்பட்ட 102 வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியர்களுக்கு லஞ்ச புகாரில் தண்டனை பெற்று தந்துள்ளதாகவும், ஆனால் கடந்த இரண்டுகளில் பாதிக்கும் குறைந்து  41 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை பெற்று தந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.