அகோரிகள் யாரை கொன்றாலும் நடவடிக்கை பாயாதா? பாலகிருஷ்ணா படத்திற்கு எழும் கண்டனம்..!

அகோரிகள் சட்டத்திற்கு கீழ் வரமாட்டார்கள் என கூறும் பாலகிருஷ்ணா..!

அகோரிகள் யாரை கொன்றாலும் நடவடிக்கை பாயாதா? பாலகிருஷ்ணா படத்திற்கு எழும் கண்டனம்..!

எத்தனை கொலைகள் செய்தாலும் அகோரி சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, அகோரி சாமியார்கள் அரசியல் சட்டத்திற்கும் மேலானவர்கள் என நடிகர் பாலகிருஷ்ணா நடித்து இருக்கக் கூடிய அகண்டா திரைப்படம் வலியுறுத்தி இருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் அகண்டா. 45 நடிகர் பாலகிருஷ்ணாவின் இரு வேறுபட்ட நடிப்பில், போயபதி சீனு இயக்கத்தில் உருவாகியிருந்தது அகண்டா. 45 நாட்களை கடந்த பிறகும் ஆந்திரா, தெலுங்கனாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது அகண்டா திரைப்படம். சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரி குவித்தது இந்த திரைப்படம். லெஜெண்ட், சிம்ஹா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து போயபதி சீனு-பாலகிருஷ்ணா கூட்டணியில் மூன்றாவது ஹாட்ரிக் வெற்றி பெற்றது அகண்டா திரைப்படம். 

திரையரங்குக்கு பிறகு படத்திற்கான டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ் ஸ்டார் வாங்கியுள்ளது. அதன்பிறகு கடந்த 23-ம் தேதி படம் ஓடிடியில் வெளியானது. 2 வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் பாலகிருஷ்ணா. முதல் பாதியில் எப்போதும் போல் மாஸ் ஹீரோவாவும், இரண்டாவது பாதியில் அகோரி சாமியாராவும் நடித்திருந்தார் பாலகிருஷ்ணா. அகோரிகள் என்றால் யார்? அவர்கள் என்ன செய்வார்கள்? ஏன் அவர்களுக்கு இந்தப் பெயர் வந்தது? அவர்கள் இறந்தவர்களின் உடலை சாப்பிடுவார்களா? கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவார்களா? இப்படி பல கேள்விகள் இதுநாள் வரை நமக்குள் இருந்துக் கொண்டே தான் இருக்கும். தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலா இயக்கத்தில், நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியான நான் கடவுள் படத்திற்கு பிறகு அவர்கள் பற்றின ஒரு புரிதல் நமக்குள் ஏற்பட்டது. வட இந்தியாவில் குறிப்பாக காசி போன்ற புனித ஸ்தலங்களில் தான் இந்த அகோரிகள் அதிகம் காணப்படுவர். பொன், பொருள் மேல் உள்ள ஆசைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு, ஒரு துறவற வாழ்க்கையை மேற்கொள்ளும் அகோரிகள், தன்னை ஒரு சிவனின் அவதாரமாகவும் நினைத்துக் கொள்வர். இவர்களிடம் ஆசி பெற்றால் அடுத்த பிறவி இருக்காது என்பது ஒருவிதமான நம்பிக்கை. 

அதுமட்டுமின்றி இறந்தவர்களுக்கு மருபிறவி இருக்கக் கூடாது என பூஜைகள் செய்வார்கள். ஆனால் அகோரிகளை ஒருங்கிணைக்கக் கூடிய அகாடாக்கள் அல்லது அகாராக்கள் ஏராளமாக உள்ளன. 10க்கும் மேற்பட்ட பொது அகாடாக்கள் உள்ளன. இந்த அகாடாக்கள் கீழ்தான் அத்தனை அகோரி சாமியார்களும் வருவர். அகாடாக்கள் அனைத்துக்குமே ஹரித்வார் புனித நகரில் சொந்தமான தலைமை நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான அகாடாக்கள் ஏசி வசதிகளுடன் கூடிய சொகுசு கட்டமைப்பு கொண்டவை. குஜராத்தின் கிர்நார், காசி உள்ளிட்ட பல இடங்களிலும் அகாடாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அகாடாக்களில் அல்லது அகோரி சாமியார்கள் ஒன்று கூடும் கும்பமேளாக்களில் போதை வஸ்துகள் இயல்பாக புழங்கக் கூடும். இந்த அகாடாக்களைச் சேர்ந்த சாமியார்கள்தான் கும்பமேளா காலங்களில் நிர்வாண ஊர்வலங்கள் நடத்துவர். பல ஆண்டுகளாக கும்பமேளா காலத்து நிர்வாண ஊர்வலங்களில் எந்த அகாடாவை சேர்ந்தவர் முதல் முன்னுரிமை பெறுவது என்பதில் பெரும் மோதலே நடக்கும். ஹரித்துவாரில் 100க்கும் மேற்பட்ட அகோரிகள் தங்களுக்கு இடையே அடித்துக் கொண்டு மாண்ட வரலாறும் உண்டு. ஆனால் போதை வஸ்துகளுக்காகவோ, கொலைகளுக்காகவோ அகாடாக்கள் மீது அகோரிகள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தது இல்லை.

இருப்பினும் அகோரிகள், அகாடாக்கள் எந்த சட்டங்களின் கீழ் வருவர் என்பது புரியாத புதிர். ஏனெனில் அகோரி சாமியார்கள் தாங்களே சிவன் என்கிற சித்தாந்த்தைக் கொண்டவர்கள். நாங்கள் இந்த அரசியல் சட்டங்களுக்குட்பட்டவர்கள் அல்ல என்பது அகோரிகளின் நிலைப்பாடு. இதனையே நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா திரைப்படத்தின் இறுதியில் பலமுறை வலியுறுத்தப்பட்டு இருக்கு. பல நூறு பேரை அடித்து கொலை செய்யும் பாலகிருஷ்ணா, சிவனாக அவதரித்தே தாம் நியாயத்தை நிலைநிறுத்த கொலை செய்தேன்; அது உங்கள் சட்டத்தின் கீழ் வராது என பலமுறை அழுத்தம் திருத்தமாக சொல்வார். இந்த கருத்து தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஒருத்தர் தற்கொலைக்கு முயன்றாலே அது சட்டப்படி குற்றம். அப்படியிருக்க, ஒருத்தரை கொலை செய்து விட்டு அது சரிதான் என கூறுவது எந்த விதத்தில் சரியானதாக இருக்கும் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.