2-வது தர்ம யுத்தத்தில் வெற்றி பெற்ற ஓபிஎஸ்..! உயர்நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள் என்னென்ன?

2-வது தர்ம யுத்தத்தில் வெற்றி பெற்ற ஓபிஎஸ்..! உயர்நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள் என்னென்ன?

உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றம்: கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

புதிய நீதிபதி: தொடர்ந்து வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு, கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரைத்தார். அதை தொடர்ந்து வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட  நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் விசாரணை நடத்தினார்.

காலை 11.30 மணிக்கு தீர்ப்பு: இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார். அதன் பிறகு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, 11.30 மணிக்கு ஒத்திவைத்தார். 

பொதுக்குழு கூட்டம் செல்லாது: அதன் பின் சரியாக 11.30 மணிக்கு தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார் நீதிபதி ஜெயசந்திரன். அப்போது கடந்த ஜுலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அதிரடி தீர்ப்பை வழங்கினார். 

தனி ஆணையர் நியமிக்க வேண்டும்: ஜுன் 23ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தின் நிலையே தொடரும் என உத்தரவிட்ட நீதிபதி, மீண்டும் அதிமுக பொதுக்குழு இருவரின் ஈடுபாட்டுடன் கூடியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டம்: ஓபிஎஸ்க்கு ஆதரவாக வெளியான இந்த தீர்ப்பை வரவேற்று தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகளிர் அணியினர் இசை வாத்தியங்களுக்கு ஏற்பவாறு நடனமாடியும் மகிழ்ச்சியடைந்தனர். 

ஓபிஎஸ்-ஈபிஎஸ் சமாதானத்திற்கு நோ: அந்தப் பக்கம் ஈபிஎஸ் பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், ஏற்கனவே பெரும்பான்மையான நிர்வாகிகள் ஈபிஎஸ்ஸை ஒற்றைத் தலைமையாக ஏற்றுக்கொண்டு விட்டதால் மீண்டும் ஓபிஎஸ்ஸோடு சமரசம் செய்து கொள்வது நடக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது: அதேபோல இந்த வழக்கில் நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும் என ஈபிஎஸ்ஸின் ஆதரவாளரும், வழக்கறிஞருமான சசிரேகா தெரிவித்தார். இதனால் அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இபிஎஸ்-ன் பதவி ஆட்டம் கண்டுள்ளது. ஜூன்23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியிருக்கிறார். 

கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அதேபோல ஈபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி, நடந்து முடிந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்திய பொதுக்குழுவை போலவே முறையாக நடந்திருக்கிறது என்றார். பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வெறும் 100 பேரின் ஆதரவோடு ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்றிருக்கிறது என்றார். நீதியரசின் தீர்ப்பு குறித்து கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுக்கப்படும் எனவும் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.