15 நாடுகளுக்கு பரவிய ஓமைக்ரான்..!

பயணத் தடையை அறிவித்த நாடுகள்..!

15 நாடுகளுக்கு பரவிய ஓமைக்ரான்..!

தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் கனடா உட்பட 15 நாடுகளில் 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் பயணத் தடை உட்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறையத் துவங்கி, நாடுகள் பல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், தென் ஆப்ரிக்காவில் கொரோனாவின் புதிய வகையாக ஓமைக்ரான் என்ற வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. 

இந்த புதிய வகை வைரஸ் 'ஸ்பைக்' புரதத்தில் 30க்கும் அதிகமான முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது வேகமாக பரவம் தன்மை உடையதாகவும், தடுப்பூசியின் செயல் திறனுக்கு கட்டுப்படாமல் போக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். தென் ஆப்ரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் தற்போது 15 நாடுகளுக்கு பரவியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், போட்ஸ்வானா, பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, இஸ்ரேல், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, தென் ஆப்ரிக்கா, செக் குடியரசு, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் ஓமைக்ரான் அச்சுறுத்தல் உள்ளது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல், அனைத்து வெளிநாட்டு பயணியருக்கும் இரண்டு வாரங்களுக்கும், ஜப்பானும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒன்பது நாடுகளுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே உத்தரவை பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அறிவித்துள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்ரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளை 'அதிக ஆபத்துள்ள நாடுகள்' என, வகைப்படுத்தி உள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணியர், விமான நிலையத்தில் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இந்நிலையில் சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; ஒமைக்ரான் வகை வைரஸ் உலக அளவில் மிக அதிக ஆபத்தானதாக இருக்கும் அபாயம் உள்ளது. ஒமைக்ரானால் மற்றொரு அலை உருவானால், அதன் தாக்கம், வீரியம் மிகவும் அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுவரை, இந்த வைரசால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாதது ஆறுதலாக உள்ளது.