நேற்று புறக்கணிப்பு...இன்று அமளி...சட்டப்பேரவையில் தொடர்ந்து பரபரப்பு காட்டும் ஈபிஎஸ்...!

நேற்று புறக்கணிப்பு...இன்று அமளி...சட்டப்பேரவையில்  தொடர்ந்து பரபரப்பு காட்டும் ஈபிஎஸ்...!

இரண்டாம் நாள் கூட்டத்தொடரில் ஈபிஎஸ் தரப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பமும் நீடித்தது.

முதல் நாள் கூட்டத்தொடர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்தக் கூட்டத்தொடர் வருகிற 19ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்திருந்தார். 

புறக்கணிப்பு செய்த ஈபிஎஸ் தரப்பு:

இதனிடையே எதிர்கட்சி தரப்பில்  ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம். எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். ஓ.பி.எஸ் தனக்கான எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இதனால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம். எல்.ஏக்கள், ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்கட்சி துணைத் தலைவர் அந்தஸ்தில் இருந்து நீக்காமலும்,  இருக்கைகளிலும் மாற்றம் செய்யாமலும் இருந்ததால்  முதல் நாள் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தனர். 

இரண்டாம் நாள் கூட்டத்தொடர்:

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. அவை தொடங்கியதும் கேள்வி நேரத்தை குறுக்கீடு செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம். எல்.ஏக்கள், இருக்கை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். மேலும், கேள்வி நேரம் முடிந்ததும் அதுபற்றி விவாதிக்கப்படும் என சபாநாயகர் கூறியும், அதனை ஏற்காத பழனிசாமி தரப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.

இதையும் படிக்க: இந்தி திணிப்பு போராட்டத்திற்கான அறிக்கை...நாளை விவாதிக்கப்படும்...!

கண்டனம் தெரிவித்த அப்பாவு:

ஈபிஎஸ் தரப்பினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அப்பாவு, அவையின் மாண்பை குலைக்க வேண்டாம் என எச்சரித்ததோடு, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை பேசவிடாமல் இடையூறு செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். ஆனாலும், பழனிசாமி தரப்பினர் ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை குண்டு கட்டாக அகற்ற அவை காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை:

முன்னதாக அவை தொடங்குவதற்கு முன், தலைமை செயலகத்தில் உள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் அப்பாவு-ஐ சந்தித்த ஈ.பி.எஸ் தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரம் குறித்து விவாதித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அவையில் ஈபிஎஸ் தரப்பினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.