இவங்க 2 பேர மட்டும் விட்டுட்டாங்க.. என்னவா இருக்கும்? ஆனாலும் அந்த ஒரு விஷயத்துக்காக முதலமைச்சருக்கு சலாம் போடலாம்..!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்களின் வரிசையில் மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் கொண்டு வந்த திமுக..!

இவங்க 2 பேர மட்டும் விட்டுட்டாங்க.. என்னவா இருக்கும்? ஆனாலும் அந்த ஒரு விஷயத்துக்காக முதலமைச்சருக்கு சலாம் போடலாம்..!

இந்தியாவுக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டில் சில தினங்களாக உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது செஸ் ஒலிம்பியாட் போட்டி தான். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றிருக்க வேண்டிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. 

4 மாதங்களில் அசத்தல்: செஸ் ஒலிம்பியாட் போட்டி என்பது கிட்டத்தட்ட ஒலிம்பிக் போட்டிகளை போன்றே நடைபெறும் என்பதால் அதற்கு அதிகளவில் நிதி தேவைப்படும். ஆகையால் இப்போட்டியை எடுத்து நடத்த யோசித்த வேளையில் தமிழ்நாடு அந்தப் பொறுப்பை ஏற்றது. பொதுவாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த 4 வருடங்களாக இதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வரும், ஆனால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டதோ வெறும் 4 மாதங்கள் தான். 

ப்ரோஷன்களில் பின்னிய திமுக அரசு: ஆயினும் கூட மிகவும் சிறப்பான முறையில் இதனை நடத்தி முடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக, சென்னையை சீர்படுத்தியது, செஸ் தம்பி சின்னத்தை பொதுமக்கள் மத்தியில் நிறுவியது, செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது, செஸ் ஒலிம்பியாட்டுக்கான பாடல் வெளியிட்டது என பலகட்ட புதுமைகளையும் உட்புகுத்தியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. 

தொடக்க விழாவில் மிரண்டு போன வீரர்கள்: உலக நாடுகளே பிரம்மிக்கும் வகையிலான செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கோலாகலமாகவும், எல்.இடி, 3டி தொழில்நுட்பங்களாலும் நிறைந்து, கமல்ஹாசனின் குரலில் தமிழர் பண்பாடு ஒலிக்க, 900 நடன கலைஞர்கள் அதற்கு ஏற்றார் போல நடனங்களை அமைத்தது, இளம் இசைக்கலைஞர் லில்டியன் நாதஸ்வரத்தின் இசை, தீ மற்றும் மாரியம்மாளின் என்சாயி என்சாமி பாடல் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த போட்டியாளர்கள் கண்டு மிரண்டு போயினர். பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்திருந்தார். 

பிரச்னைகள் அணிவகுப்பு: ஒரு நிகழ்ச்சி என்றால் அதில் பிரச்னைகளும் நடைபெறுவது வழக்கம் தானே? அதேபோல் தான் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள், பேனர்களில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை, என்சாயி என்சாமி பாடல் நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு பங்கேற்கவில்லை என பல சர்ச்சைகளும் எழுந்தது. 

நிறைவு விழா: கிட்டத்தட்ட 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.  இதில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், குழுக்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழ் மண் என்ற தலைப்பில் இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாற்றையும், அதில் தமிழ் வீரர்களின் பங்கினையும், மீண்டும் கமல்ஹாசனின் குரலில் ஒலிக்கச் செய்து கலைஞர்கள் நடனம் மற்றும் நாடகம் மூலம் வெளிப்படுத்தினர்.

முதலமைச்சர்களுக்கு மரியாதை: இந்நிகழ்ச்சியில் மிகவும் கவனிக்கப்பட்டது என்னவென்றால், தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சியமைத்த முதலமைச்சர்கள் குறித்த பட்டியல் இடம் பெறும் போது, அதில் எதிர்க்கட்சிகளான அதிமுக முன்னாள் முதலமைச்சர்களின் படங்களும், அவர்களை பற்றின புகழாரமும் இடம்பெற்றிருந்தது தான். கருணாநிதி - எம்ஜிஆர் ஆகியோர் நேருக்கு நேர் எதிர்த்து கொண்டார்கள், ஆனாலும் தமிழ்நாட்டில் அவர்களது பங்கு அளப்பறியது. ஆரம்பத்தில் திமுகவில் எம்ஜிஆர் இருந்தார் என்பதற்காக கூட அவரது புகழ் கூறப்பட்டிருக்கலாம். 

எதிர்க்கட்சி முதலமைச்சருக்கும் புகழாரம்: ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக எதிர்த்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைத் தான். ஆயினும் கூட நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றது. அவருக்கு புகழாரமும் கூறப்பட்டது.
பொதுவாக ஒரு ஆளும் கட்சியினர் இது போன்று பெரிய நிகழ்ச்சிகள் நடத்தும் போது, தங்களது கட்சியினை மட்டுமே பிரதானப் படுத்தியும், மிகைப்படுத்தியும் பேசுவதுண்டு. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக, வரலாற்றை மறைக்காமல், அப்போது யார் எப்படி இருந்தார்கள் என்பதை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டியது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஓபிஎஸ்-ஈபிஎஸ் படங்கள் இல்லையே?ஆனாலும் கூட அந்த வரிசையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து வந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. ஒருவேளை அவர்கள் இன்றும் நேரடியாக இருப்பதால் அவர்களை பற்றி கூறவில்லையா? அல்லது முந்தைய தலைவர்களை போல இவர்கள் செயல்படாமல் இருப்பதாக அவர்கள் நினைத்து விட்டார்களா? என்ற சந்தேகம் இன்னொரு பக்கம் எழத்தான் செய்கிறது.