ஜி.எஸ்.டி கவுன்சிலில் நான் பேசியதை பிற மாநில அமைச்சர்களே பாராட்டினார்கள்.! மனம் திறந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.! 

ஜி.எஸ்.டி கவுன்சிலில் நான் பேசியதை பிற மாநில அமைச்சர்களே பாராட்டினார்கள்.! மனம் திறந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.! 

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் அவர் பேசியது இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரபல ஆங்கில நாளேடான டெக்கான் கிரோனிக்கல்ஸ் நாளிதழுக்கு அவர் பேட்டியளித்தார். 


அதில் செய்தியாளர் "ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நீங்கள் ஆற்றிய உரையில், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதை முன்னிறுத்தி கூட்டாட்சி முறையை வலியுறுத்தினீர்கள். இத்தகைய பேச்சுக்கள் தற்போது பா.ஜ.க.வால் நடத்தப்படும் ஒன்றிய அரசுடன் தி.மு.க.வை மோதல் முறைக்கு தள்ளிவிடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? என்று கேள்வியெழுப்பினார். 

அந்த கேள்விக்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன் "ஒருவர் உரையை அது நிகழ்த்தப்பட்ட சூழலுக்கு ஏற்ப பார்க்க வேண்டும். 2017-ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், தி.மு.க. ஆட்சி அமைந்தது இதுவே முதல் முறை என்பதால், முதல் உரையில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்பினோம். கூட்டாட்சி முறையை வலியுறுத்தவே நான் அங்கு இதை முன்வைத்தேன் என்றோ, மாநிலத்தின் உரிமைகள் குறித்து உரையாற்ற நான் அங்கு சென்றேன் என்றோ நான் சொல்லவில்லை. ஜி.எஸ்.டி பயணத்தின் தொடக்கத்தில் இருந்து ஆதாயங்கள் மற்றும் இழப்புகளை மறு மதிப்பீடு செய்யுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொண்டேன். எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடுகையில். ஆதாய இலக்குகள் அடையப்படவில்லை, இழப்புகள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக இருந்தன. எனவே கட்டமைப்பில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இது என சுட்டிக்காட்டினேன். நான் இப்போது இல்லை என்றால் பின் எப்போது? எனக் கேட்டேன். நெருக்கடிகள் ஏதும் இல்லாத காலத்தை விட, ஒரு மாற்றம் அல்லது மறுசீரமைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இப்போது மிகவும் அதிகமாக இருப்பதாக நான் இப்போதும் உணர்கிறேன். 

நான் மோதல் போக்குடன் செயல்பட்டு இருந்தால்,  எனது கருத்துக்களை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகித்து நான் கேட்டுக்கொண்டபடி அதை கூட்டத்தின் நிகழ்வறிக்கையில் நிதியமைச்சர் ஏன் சேர்த்தார்? கூட்டாட்சி முறை பற்றி ஒரு விரிவுரை வழங்கி பாடம் எடுக்கும் நோக்கத்துடன் நான் அங்கு செல்லவில்லை. ஒரு நல்ல குடிமகனாகவும், ஜி.எஸ்.டி கவுன்சிலின் மனசாட்சியுள்ள உறுப்பினராகவும் என் பணியை மேற்கொண்டேன். மற்ற மாநில அமைச்சர்கள் என்னை அலைபேசியில் அழைத்தும் எழுத்துபூர்வமகவும் பாராட்டினர். எனக்கு இந்த நிகழ்வு குறித்து எந்த வருத்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.