திமுகவில் இணைகிறார் பழனியப்பன்? பிளான் போட்டு நண்பனை தூக்கிய செந்தில்பாலாஜி..!

பழனியப்பனை மூளைச் சலவை செய்த செந்தில்பாலாஜி

திமுகவில் இணைகிறார் பழனியப்பன்? பிளான் போட்டு நண்பனை தூக்கிய செந்தில்பாலாஜி..!
ஒரு புறம் சசிகலா அதிமுக தொண்டர்களுடன் செல்போனில் உரையாடிய ஆடியோக்கள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில், அமமுக மீண்டும் சக்தி பெறும் என நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுக, திமுக என இருபெரும் கட்சிகளை தாவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் அதிமுக தோல்வியுற்றாலும் 66 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. சசிகலாவின் இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளதால் அமமுகவில் உள்ளவர்களை அதிமுகவில் இணைக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவி, தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் செந்தில்பாலாஜி தனது பலத்தை காட்ட அமமுகவில் உள்ள தனது பழைய நண்பர்களை திமுக பக்கமும் இழுத்து வருகின்றனர். 

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அமமுக மாவட்ட செயலாளரான பொன்.ராஜா, சந்தானகிருஷ்ணன், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கடந்த 28-ம் தேதி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இவர்களை திமுகவில் சேர்க்க அமைச்சர் சேகர்பாபு முயற்சி எடுத்து வந்த வேளையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமினை தூதுவிட்டு கூண்டோடு அதிமுகவில் வளைத்து போட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதேபோல கடந்த அமமுகவில் தனது நண்பர்களாக இருந்த அமமுக சட்டமன்ற வேட்பாளர்களும், அதிமுகவில் இருந்து தினகரனுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுமான மானாமதுரை மாரியப்பன் கென்னடி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் டார்ச்சர் தாங்க முடியாமல் கடந்த ஜூன் மாதம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

திமுகவில் தனது பலத்தை நிரூபிக்கும் வண்ணம் அமமுகவின் மண்டலப் பொறுப்பாளரும், துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பனின் மனதையும் செந்தில்பாலாஜி சலவை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே அவரும் திமுகவில் இணைந்து விடுவார் என அமமுகவினர் கூறி வந்த நிலையில், செந்தில் பாலாஜியை விட பழனியப்பன் சீனியர் எனவும், அவர் எப்படி செந்தில்பாலாஜி மூலம் முயற்சி செய்வார் எனவும் அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.