எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த பிகே..!

பாஜகவை வீழ்த்த கட்சிகளுக்கு ஃப்ரீ அட்வைஸ்..!

எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த பிகே..!

இந்தியாவில் பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தல் குறித்தும் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள மொத்தம் 5 மாநிலங்களில் பஞ்சாப்பை தவிர 4 மாநிலங்களில் பாஜக தான் தற்போது ஆளுங்கட்சியாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக உள்ள உத்திரப்பிரதேசத்தை தனது கோட்டையாகவே கருதுகிறது பாஜக. மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது பாஜக தலைமை. இந்த 5 மாநில தேர்தலும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம் என்றே கருதப்படுகிறது. அதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. 

உத்திரபிரதேசத்தில் பாஜகவில் இருந்து 3 அமைச்சர்கள் உட்பட பல எம்.எல்.ஏக்களும் வெளியேறி, அதில் சிலர் சமாஜ்வாதியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பஞ்சாப்பையும் சேர்த்து 5 மாநிலங்களிலும் வெற்றி பெற பாஜக என்ன மாதிரியான வியூகங்களை கையில் எடுத்துள்ளது? இந்த தேர்தல் குறித்த தனது பார்வையை பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பகிர்ந்துள்ளார். அதில், "மேற்கு வங்க தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக நான் அதிகம் பேச்சுவார்த்தை நடத்தினேன். குறிப்பாகக் கடந்த மே மாதம் முதல் செப். வரை கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை எதோ இப்போது தொடங்கியதை போலச் சிலர் குறிப்பிடுகின்றனர். சொல்லப்போனால் நான் காங்கிரஸ் தலைமையுடன் கடந்த 2 ஆண்டுகளாகவே இது குறித்து ஆலோசித்து வருகிறேன்.

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நானும் காங்கிரஸும் வந்து இணைந்து பணியாற்றுவது தான் இயல்பானதாகத் தெரிகிறது. ஆனால் இரு தரப்பும் இணைந்து செயல்பட நம்பிக்கை அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், அது காங்கிரஸில் நடக்கவில்லை. சில விஷயங்களில் எங்களால் ஒத்த முடிவுகளை எடுக்க முடியவில்லை. உதாரணமாக, கடந்த 2017 உ.பி. தேர்தலில் நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மோசமான அனுபவமாக இருந்தது. அதனால் நான் கூடுதல் சந்தேகங்கள் ஏற்பட்டன. என் கைகளைக் கட்டியிருப்பதை நான் விரும்பவில்லை. எனது பின்னணி கருத்தில் கொண்டு நான் 100% அவர்களுக்கு உண்மையாக இருப்பேனா என்று காங்கிரஸ் தலைமை சந்தேகம் கொண்டதிலும் கூட நியாயம் இருக்கவே செய்கிறது. ஆனால், இதையெல்லாம் தாண்டி நான் காங்கிரஸ் கட்சியில் இணையவே இருந்தேன். இது ஒரு குறிப்பிட்ட தேர்தலைப் பற்றியது அல்ல. 2024 தேர்தலுக்காகக் கூட இல்லை. இது காங்கிரஸ் கட்சியை மறுதொடக்கம் செய்வது பற்றியது.

இது குறித்து நடந்த ஆலோசனையில் கிட்டதட்ட 90% விஷயங்களில் எங்கள் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. நான் காங்கிரஸைப் உண்மையாகவே முக்கியமானதாகப் பார்க்கிறேன். அவர்கள் இல்லாமல் எதிர்க்கட்சி என்பது சாத்தியமில்லை. ஆனால், இதற்கு தற்போதைய தலைமையின் கீழ் இருக்கும் அதே காங்கிரஸாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இதற்குப் பழிவாங்கும் வகையில் நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூட சிலர் கூறுகின்றனர். ஆனால், அதில் உண்மை இல்லை. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியை என்னால் பழிவாங்க முடியாது. வரும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும். ஆனால், அதற்குக் காங்கிரஸ் கட்சியை நாம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இப்போது இருக்கும் எதிர்க்கட்சிகளை வைத்துக் கொண்டு பாஜகவை வீழ்த்துவது சந்தேகம் தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள நம் நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை என்றே நான் நினைக்கிறேன். சித்தாந்த ரீதியாகக் காங்கிரஸ் பலவீனமடைய நாம் அனுமதிக்கக் கூடாது. அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் சுமாராக 200 லோக்சபா இடங்கள் உள்ளது. அதில் பாஜகவால் சொற்ப இடங்களில் மட்டுமே வெல்ல முடிகிறது. மீதமுள்ள 350 இடங்களில் தான் பாஜக மாபெரும் வெற்றியைப் பெறுகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் திட்டத்தை இதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். வியூகங்களை மாற்றி அமைத்தால் தான் எதிர்க்கட்சிகளா அதிக இடங்களை வெல்ல முடியும்" எனக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெறவும், முதன்முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதற்கும் முக்கிய காரணங்களில் பிரசாந்த் கிஷோரும் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி இப்படி பலருக்கும் தேர்தல் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அப்படியிருக்க இந்த தேர்தல் குறித்த இவரது கருத்துகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.