வரலாற்றில் அரசியலை மாற்றிய யாத்திரைகள்..! காந்தியில் தொடங்கி இன்று வரை..!

வரலாற்றில் அரசியலை மாற்றிய யாத்திரைகள்..! காந்தியில் தொடங்கி இன்று வரை..!

இந்திய அரசியலில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்களை விட யாத்திரைகள் தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்திய வரலாற்றில் சில முக்கிய தலைவர்களின் யாத்திரைகள் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது.

காங்கிரஸ்:

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை முழு வீசி செய்து வருகின்றன தேசிய கட்சிகள். காங்கிரஸும் அதற்கான வேளைகளில் தீவிரம் கட்டி வருகிறது. முன்னதாக கட்சியின் சில முக்கிய மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி வருவது, காங்கிரசுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்திய ஒற்றுமை பாதயாத்திரை:

உட்கட்சி பூசல்களை சரி செய்து, காங்கிரஸை மீண்டும் வலுபடுத்தும் நோக்கிலும், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க, இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை மேற்கொள்ள உள்ளார் ராகுல் காந்தி.

மகாத்மா காந்தி:

சுதந்திரத்துக்கு முன்பாக கடந்த 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில், ஆங்கிலேயர்களின் உப்பு வரிக்கு எதிராக தண்டி நோக்கி 388 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை சென்றது சுதந்திர வேட்கையை அதிகரித்தது.

மேலும் படிக்க: வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்! தந்தை குறித்து ராகுல் காந்தியின்உருக்கமான பதிவு..!

வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்! தந்தை குறித்து ராகுல் காந்தியின்உருக்கமான பதிவு..!

சுனில் தத்:

1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் இந்திய அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்த சமயத்தில், நடிகரும் அரசியல்வாதியுமான சுனில், 2000 கி.மீ. தூர யாத்திரையை மேற்கொண்டார். 78 நாட்கள் நீடித்த இந்த யாத்திரை அமிர்தசர் ஹர்மிந்தர் சாஹிப் கோயிலில் நிறைவடைந்தது. மஹாசாஹிப் பாதயாத்திரை என்று அழைக்கப்பட்ட இதன் முடிவில் அமைதியை வலியுறுத்தினார் சுனில் தத்.

அத்வானி:

கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் அக்டோபர் மாதங்கள், பாஜக மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். மண்டல் கமிஷன் பரிந்துரைபடி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய அப்போதைய பிரதமர் வி.பி.சிங் முடிவெடுத்த நிலையில், அதற்கு எதிராக பாபர் மசூதி விவகாரத்தை கையில் எடுத்தது பாஜக. 

இதற்காக குஜராத்தின் சோம்நாத்தில் ரத யாத்திரை தொடங்கிய அத்வானி மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒருங்கிணைந்த ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் சென்று அயோத்தியில் தனது யாத்திரையை நிறைவு செய்தார். இந்த யாத்திரையால் பல மாநிலங்களில் கலவரங்களும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அத்வானியின் ரத யாத்திரையே பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ராஜசேகர ரெட்டி:

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திற்காக,, மூன்று மாதங்கள் 1,475 கி.மீ தூரம் பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த பாத யாத்திரையே ராஜசேகர ரெட்டியை, ஆந்திர மக்கள் மத்தியில் மாபெரும் தலைவராக உயர்த்தியது. அடுத்து 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று ஆந்திர முதலமைச்சரானார். 

மேலும் படிக்க: கோட் சூட்டில் லண்டன் பறந்த அமைச்சர்...வேற லெவலில் ட்ரெண்டாகும் போட்டோஸ்...!ஏன் தெரியுமா?

சந்திரபாபு நாயுடு:

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ராஜசேகர ரெட்டியை பின்பற்றி 1,700 கி.மீ தூர பாத யாத்திரை மேற்கொண்டார். மக்களின் ஆதரவு பெற்றார். பாதை யாத்திரைக்கு பின்னர் வந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திராவின் முதலமைச்சரானார்.

ஜெகன் மோகன் ரெட்டி:

அவரை தொடர்ந்து, ராஜசேகர ரெட்டியின் மகனாக ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 2017 ஆம் ஆண்டு தனது தந்தையை போலவே நடைபயணம் மேற்கொண்டார். 125 தொகுதிகள், 13 மாவட்டங்களில் 430 நாட்கள் பாதயாத்திரை சென்று மக்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் தற்போது ஆந்திராவின் முதலமைச்சராக உள்ளார். 

திக் விஜய் சிங்:

கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் 192 நாட்கள் தனது மனைவியுடன் யாத்திரை மேற்கொண்டார். 3,300 கிலோ மீட்டர் தூர இந்த பாத யாத்திரையால் மத்திய பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி பெற்றது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வென்றது. ஆனால், கமல்நாத்தை முதலமைச்சராக்கியது காங்கிரஸ்.

இந்த வரிசையில் தற்போது ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணம் காங்கிரஸ்க்கு கை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.