பப்ஜி மதனை காவலில் எடுத்துள்ள போலீசார்… சொத்துகுவிப்பு உட்பட பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு?  

பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பப்ஜி மதனை காவலில் எடுத்துள்ள போலீசார்… சொத்துகுவிப்பு உட்பட பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு?   

பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வி.பி.என் சர்வர் மூலம் விளையாடி அதை தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து வந்த மதன் தனது யூ-டியூப் சேனலில் பெண்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாகவும், அவரது சேனலை பின் தொடரும் சிறுவர் சிறுமிகளை அவரின் பேச்சு தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவும் சமூல வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பப்ஜி மதன் மீது மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கொடுக்கபட்ட புகார்களும் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் யூ-டியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தனிப்படை அமைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவி கிருத்திகாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மதன் மீது இணையவழியிலும் நேரடியாகவும் 200 க்கும் மேற்பட்ட புகார்கள் மத்திய குற்றப்பிரிவில் குவிந்து வந்தது.

பின்னர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு முதற்கட்டமாக மதனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் இதுவரை பெறப்பட்ட 200 க்கும் மேற்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், மதன் யூ-டியூப் சேனல் மூலம் மாதம் 7 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டி கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் அவர் வேறு எங்கெங்கு சொத்துக்கள் வாங்கியுள்ளார், பினாமி கணக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாகவும் விசாரணை நடத்துவார்கள் எனவும், பினாமி சொத்துக்கள் ஏதும் கண்டறியப்பட்டால் அது தொடர்பாக அமலாக்கத்துறைக்கும் தகவல் அளிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மதன் மோசடியாக ஈட்டிய வருமானம் மூலம் வாங்கிய சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 கோடி ரூபாய் பணம் இருப்புகொண்ட வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.