தடைகளை தாண்டி வெற்றியின் விளிம்பில் நிற்கும் ரேவதி... ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீராங்கனை கடந்து வந்த பாதை...

காலில் ஷூ இல்லாமல் மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ரேவதி

தடைகளை தாண்டி வெற்றியின் விளிம்பில் நிற்கும் ரேவதி...  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீராங்கனை கடந்து வந்த பாதை...
மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி வீரமணி. தனது 4 வயதில் தனது பெற்றோரை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.  ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் தனது அத்தியாவசிய தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத ஏழ்மை நிலையால் வாடினார்.  துவக்க பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி பயின்றுள்ளார்.  
 
12 ஆம் வகுப்பு பயின்ற போது காலில் ஷூ இல்லாமல்  மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார் ரேவதி. அப்போது மதுரை அரசு ரேஸ்கோர்ஸ் மைதான  பயிற்சியாளராக இருந்த கண்ணன் அவரது  திறமையை கண்டு பயிற்சியளிக்க முன்வந்தார். துவக்கத்தில் அவரது பாட்டி ஆரம்மாள் ரேவதியை, பயிற்சிக்கு அனுப்ப முன்வரவில்லை. இந்த நிலையில் அவரிடம் மாணவியின் திறைமையை பற்றி எடுத்து கூறி பின்னர் சம்மதிக்க வைத்துள்ளார், பயிற்சியாளர் கண்ணன்.
 
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்ததால் ரேவதியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரேவதி கல்லூரி படிப்பை தொடரவும் அவருக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார் அவரது பாயிற்சியாளர் கண்ணன். திறமையை வெளிப்படுத்த தேவையான பயிற்சி உணவு நல்ல ஆலோசனையை வழங்கியதுடன் அவரது பாட்டிக்கு தேவையான ஆதரவையும் வழங்கி மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் கண்ணன். 

 
தொடர்ந்து தடகளத்தில் சாதனை படிக்கல்லை எட்டும் முனைப்புடன் சாதனை பயணத்தை துவக்கிய ரேவதி, 2016 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் தடகள  போட்டியில் 100 மற்றும் 400 மீட்டர் தடகள போட்டியில் முதல் இடத்தை பிடித்தார். 2019 ஆசிய அளவிலான அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்ற அந்த சாதனை வீராங்கனை,  2019 ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பிலும் கலந்து கொண்டார்.
 
இதன் விளைவாக, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பாட்டியாலா பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார் ரேவதி. இதற்கிடையில் மதுரை தெற்கு ரயில்வேயில் பணியும் கிடைத்துள்ளது.  ஏற்கெனவே பல்வேறு ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற ரேவதி கடந்த  ஞாயிறன்று நடந்த தகுதிச் சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53 புள்ளி 55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக் தடகள போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட  தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 
 
துவக்கத்தில் தனது பேத்தியை போட்டிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வந்ததாகவும் அவரின் திறமையை கண்டு பயிற்சியாளர் வற்புறுத்தியதன் அடிப்படையில் பின்னர் அனுமதித்ததாகவும்  கூறும் அவரது பாட்டி, ஏழ்மையான நிலையில் உணவிற்கு கூட வழியின்றி தவித்தநிலையில்  கடன் பெற்று தனது பேத்திக்கு தேவையான விளையாட்டு செலவை செய்ததாக கூறினார். 
 
ரேவதியின்  இடைவிடா கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக கருதுவதாகவும் அவருக்கு வறுமை குறித்த கவலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தேவையான  ஆலோசனைகளையும் தைரியத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறார் பயிற்சியாளர் கண்ணன்.
 
இப்படி வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி இன்று வெற்றியின் விளிம்பில் நிற்கும் ரேவதியை நாம் அனைவரும்  உற்சாகப்படுத்தி உயரத்திற்கு கொண்டு செல்வோம்.