சென்னையில் பேருந்தை தொடர்ந்து ரயில் நிலையங்களில் மீண்டும் தலைதூக்கும் ’ரூட் தல’ விவகாரம்...  

கரோனா ஊரடங்கு தொடர்ந்து கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளே ரயில் நிலையங்களில் குழுக்களாக கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரம் பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பேருந்தை தொடர்ந்து ரயில் நிலையங்களில் மீண்டும் தலைதூக்கும் ’ரூட் தல’ விவகாரம்...   

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் வீரியம் குறைய தொடங்கியதை அடுத்து தமிழக முதல்வர் கல்லூரி மற்றும் பள்ளி களை திறந்து மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்திருந்த உத்தரவின் பெயரில் நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது. கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே சென்னையில் இரு தரப்பினர் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பய உணர்வையும் மேலோங்கச் செய்துள்ளது.

குறிப்பாக சென்னையில் முன்பு கல்லூரி மாணவர்கள் இடையே பேருந்தில் ரூட்டு தல என்ற பெயரில் யார் கெத்து என்பதை காண்பிப்பதற்காக பல்வேறு மோதல் சம்பவங்கள் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக பல கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பயங்கர ஆயுதங்களைக் கொண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அடிதடியில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் கல்லூரி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பேருந்துகளில் ரூட்டு தலை என்கின்ற பெயரில் நடைபெற்றுவந்த கோஸ்டி மோதல்கள் தற்பொழுது ஒரு படி மேலே சென்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறிய மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட நீண்ட நேரமாக கோஷமிட்டதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் விலக்கிவிட்டு பின்னர் ரயிலில் ஏறி சென்று அவர்கள் வியாசர்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு இருவரும் பயங்கர சத்தத்துடன் மோதிக் கொண்டதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பபட்டனர்.

அங்கிருந்து புறப்பட்ட மாணவர்கள் ரயிலில் ஏறி கொரட்டூர் ரயில் நிலையத்தில் இறங்கி மீண்டும் மோதலில் ஈடுபட தொடங்கினர் விடாமல் துரத்தி சென்ற ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு அனைத்து மாணவர்களின் மோதலுக்கு நடுவே சென்று தடுத்துவிட்டு அவர்களை அனைவரையும் ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டனர். பின்பு மாணவர்கள் எந்த ரயில் நிலையங்களிலும் மோதல் சம்பவத்தில் ஈடுபடாத வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கல்லூரிகள் திறந்த முதல் நாளே மாணவர்கள் குழுக்களாக பிரிந்து தங்களில் யார் கெத்து என்பதை காட்டுவதற்காக மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடந்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலத்தில் அதிக அளவில் அதிகரித்ததை போல தற்பொழுது அதிகரிக்காத வண்ணம் தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை காவல்துறை தரப்பில் விரைவாக மேற்கொண்டால் மட்டுமே இளைஞர்களின் எதிர்காலம் காக்கப்படும் என்றும் பொதுமக்கள் அச்சமின்றி வெளியில் சென்று வர இயலும் எனவும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.