என்கவுண்டருக்கு பயந்து சரணடைந்த ரவுடி படப்பை குணா..!

மனைவியை கைது செய்ததால் பரபரப்பு..!

என்கவுண்டருக்கு பயந்து சரணடைந்த ரவுடி படப்பை குணா..!

பிரபல ரவுடியான படப்பை குணாவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் ஒரு சில ரவுடிகளை நாம் பார்க்கும் போது இப்படியும் இருப்பரா என்ற சந்தேகம் வரும். ஆனால் அப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை ஒருசில சம்பவங்கள் நடைபெறும் போது தான் உணருவோம். அப்படி தான் படப்பை குணா பற்றிய செய்தியும். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா எனப்படும் குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியலெஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், என சுமார் 42 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

பல முறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையும் சென்றுள்ளார். இந்த நிலையில், மதுரமங்கலத்தை சேர்ந்த ரூபாவதி என்பவருக்கு சொந்தமான காலிமனை பட்டாவை, குணா, சென்னை ஆயுதப்பிரிவில் பணியாற்றி வரும் சதீஷ்குமார், நாகராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 பேர்  மிரட்டி வாங்கியதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குணாவை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர் அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த குணா தலைமறைவாக இருந்து தனது தொழிலை செய்து வந்தார். இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதனை தடுக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் எடிஎஸ்பியாக உள்ள வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான அதிகாரிகள் காஞ்சிபுரத்தில் ஆட்டம் காண்பித்து வந்த பல ரவுடிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வரிசையில், தொடர்ச்சியாக படப்பை குணா தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் படைப்பை குணாவின் மனைவியும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர் எல்லம்மாள் என்பவரை இன்று அதிகாலை கூடுதல் எஸ்பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே குணாவின் மனைவி எல்லம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், தனது கணவர் குணா சரணடைய தயாராக உள்ள நிலையில், அவரை காவல்துறை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டமில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், படப்பை குணா சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவார் எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.வழக்கு முடிந்த கையோடு தலைமறைவாக இருந்த படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டைந்தார். அவரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டு அதற்கான நடவடிகைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.