கட்சிகாரர்களை ஒதுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..! மாற்றுக்கட்சியினருக்கு முன்னுரிமை..!

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தும் ஸ்டாலின்..!

கட்சிகாரர்களை ஒதுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..! மாற்றுக்கட்சியினருக்கு முன்னுரிமை..!
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு அரியணை ஏறியுள்ளது. இதனால் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள திமுகவினர், கட்சிக்காக உழைத்தவர்கள் தங்களுக்கு ஏதேனும் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர். 
 
தேர்தலுக்கு முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பதவி கொடுக்க இயலாது எனவும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சி சார்பிலோ, கூட்டணி கட்சியினர் சார்பிலோ யார் நின்றாலும் அவர்களை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும் எனவும், அதை வைத்து மார்க் போடப்பட்டு, உரிய பதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 
 
இதனால் மகிழ்ச்சியடைந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேர்தலில் தங்களது முழு முயற்சியுடன் களத்தில் இறங்கி வேலை செய்தனர். அதன் பலனாக தேர்தலில் திமுகவும் வெற்றி பெற்றது. ஆட்சி அமைந்த பிறகு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய முதலமைச்சர் வேறேதிலும் கவனம் செலுத்தவில்லை. ஜூன் மாத பிறபகுதியில் இருந்து தான் பிற விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 
 
இந்த சூழலில் சிறுபான்மை ஆணையத் தலைவராக காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸூக்கும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவராக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமாருக்கும் பதவி அளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான திமுகவினர்,  10 ஆண்டுகளுக்கு பிறகு மாங்கு மாங்கு என கட்சிக்காக உழைத்தவர்களை விட்டு விட்டு திமுக அல்லாதவர்களுக்கும், தோழமை கட்சியை சேர்ந்தவர்களுக்கும் பதவி வழங்கியது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பீட்டர் அல்போன்ஸூக்கு தென்காசி தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்ட போது, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் தேர்தலில் கவனம் செலுத்த முடியாது எனக் கூறியிருந்தார் பீட்டர் அல்போன்ஸ்.  தேர்தல் முடிந்த 2 தினங்களில் அவரது மனைவி இறந்து போக, அவரது சோகத்தில் பங்கேற்று, அவரை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக அவருக்கு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பதவியை கொடுத்ததாக கூறப்படுகிறது. 
 
அதேபோல, பல வருடங்களாக திமுகவுடன் தோழமை அமைப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்த பொன்.குமாருக்கும் பதவி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இவர்களை விட திறமையானவர்கள், கட்சிக்களுக்காக உழைத்தவர்கள் இருக்கையில் அவர்கள் இருவருக்கும் பதவி கொடுத்தது அதிருப்தி அளிப்பதாக தெரிவிக்கின்றனர் திமுக நிர்வாகிகள். 

இது ஒருபுறம் இருக்க, கட்சியினர் ஸ்டாலினை சந்திக்கவே முடிவதில்லை என்ற குற்றமும் சாட்டப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிமுக, அமமுகவினர் அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து திமுக இணைந்து வரும் நிலையில், அதிகம் மாற்றுக் கட்சியினரை சந்திப்பதிலேயே அவர் நேரம் செலவிடுவதாக கூறுகின்றனர். தேர்தலுக்குப் பின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமே ஒருமுறைதான் நடந்திருக்கிறது. அதுவும் முக்கால் மணி நேரத்துக்கும் குறைவாகவே நடந்தது. 

இருப்பினும் அவரது ஆதரவாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என கூறி, ஆத்திரமடைந்தவர்களை சமாதானம் படுத்தி வருகின்றனர். என்னதான் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் கவனம் செல்த்தினாலும், கட்சியில் இருப்பவர்களையும் மதிக்க வேண்டும் என அரசல் புரசலாக பேசிக் கொள்கின்றனர் திமுக நிர்வாகிகள்..