வேலுமணி, இப்போ தங்கமணி நெக்ஸ்டு டார்கெட் மெயின் தல..!! மாஸ்டர் ஸ்கெட்ச் போடும் ஸ்டாலின்..!!

லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருவதை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேலுமணி, இப்போ தங்கமணி நெக்ஸ்டு டார்கெட் மெயின் தல..!! மாஸ்டர் ஸ்கெட்ச் போடும் ஸ்டாலின்..!!

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுகவின் ஊழல்களை பட்டியலிட்டதோடு,  தான் முதல்வராக வந்ததும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்திருந்தார் அது போலவே, தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து ஜூலை மாதம் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆகஸ்டு மாதம் எஸ்.பி.வேலுமணி, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி, அக்டோபர் மாதம் சி.விஜயபாஸ்கர் பின்பு நவம்பர் மாதத்தில் ரெஸ்டு விட்டு, தற்போது டிசம்பர் மாதத்தில் தங்கமணி என முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை அமைச்சர்களோடு நிற்காமல் முந்தைய ஆட்சியில் அவர்கள் முறைகேடு செய்ய உதவியாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என அனைவரது இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது நாமக்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2020ஆம் ஆண்டு  மார்ச் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக தங்கமணி குடும்பம் ரூ.4.75 கோடி சொத்து சேர்த்துள்ளதாகவும், சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ,சி விஜயபாஸ்கர், கே சி வீரமணி தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில் சிக்கும் ஐந்தாவது முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது கவனிக்கத்தக்கது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரில் தொடங்கி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்டோர் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. ரெய்டுகளை தொடர்ந்து வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஐந்தாவது ஆளாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும் இணைந்துள்ளார். 

இந்த வருமான வரித்துறையினரின் சோதனை கலியாட்டத்தில் முதலில் சிக்கியவர் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கடந்த ஜூலை மாதம் அவர் வருமானத்துக்கு 55 சதவீதத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ரூ.2. 51 கோடியாக இருந்த  சொத்து, 2021ல் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்ததை அறிந்து அவரது வீடு, அலுவலகம் என கோவையிலும், சென்னையிலும் 60 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் அதிமுகவை சேர்ந்த வணிகவரித்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை நடத்தி ரூ.28.78 கோடி அளவில் வருமானத்துக்கு அதிகமாக 654 மடங்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக அவர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதையடுத்து அக்டோபர் மாதத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர், அதில் இவர் அமைச்சராக இருந்த போது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்தது தெரியவந்ததால், இவர் மீதும் இவர் மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

 தற்போது ஒரு மாதம் இடைவேளையின் பிறகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாகவும், அவரது இடது கரமாகவும் விளங்கிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமாக உள்ள ஈரோடு, நாமக்கல், சென்னை என  69 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதில், நாமக்கல் ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீடு, கரூர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வசந்தி வீடு, வேலூர் காட்பாடி அருகேயுள்ள செங்குட்டையில் உள்ள உறவினர் வீடு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரண் வீடு, சேலம் ரெட்டிப்பட்டியில் உள்ள ஓட்டல் மற்றும் உரிமையாளர் வீடு, சென்னை நுங்கம்பாக்கம், மதுராவயலில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கர்நடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களும் அடங்கும். 

இந்த அதிரடி சோதனை நடவடிக்கை இதோடு நின்றுவிட போவதில்லை என்றும் இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக எடப்பாடி பழனிசாமி வீட்டில் ரெய்டு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. சென்ற ஆட்சியில் முறைகேடு நடத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள்  என அனைவரது இடத்திலும் திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக அதிரடி சோதனையை நடத்திவரும் நிலையில் அதிமுகவினர் இது ஸ்டாலின் அரசின் பழிவாங்கும் படலம் என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்த ரெய்டு குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடக்கிறது. அதிமுக செல்வாக்கு வளர்வதை கண்டு பொறுக்க முடியாத திமுக அரசு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. அதிமுகவுடன் நேரடியாக மோத முடியாமல், லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை திமுக அரசு நடத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளது.