திக் திக் திக் நிமிடங்களோடு நகரும் அதிமுக விவகாரம்… நடக்குமா பொதுக்குழு?

திக் திக் திக் நிமிடங்களோடு நகரும் அதிமுக விவகாரம்… நடக்குமா பொதுக்குழு?

அதிமுகவில் நடக்கும் உட்கட்சி விவகாரம் தமிழ்நாடு அறிந்ததே. தினம் தினம் அதிமுகவில் அரசியல் நகர்வுகள் இருமுனைப்போட்டியாக கூர் தீட்டப்பட்டுக்கொண்டே வருகிறது. இந்த அரசியல் சதுரங்கத்தில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் கை ஓங்கினாலு, அதே அரங்கில், தனி ஆளாக நின்று ஓபிஎஸ்ஸும் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொண்டார். சி.வி. சண்முகம், கே.பி. முனிசாமி என இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆக்ரோஷமாக 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக கூறிவிட்டனர். இந்த இடத்தில் தான், சிக்கலே தற்போது இபிஎஸ் தரப்பிற்கு தொடங்கியுள்ளது.  

அதிமுக நிர்வாகிகளை அழைக்கும் இபிஎஸ் தரப்பு:

அதிமுகவின் செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி ஜூலை 11 ஆம் தேதி எழுச்சியுடன் நடைபெறும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கூறிவருகிறார். இதற்கு வலுசேர்க்கும் விதமாக, வானகரத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்காக மும்முரப்பணியில் இபிஎஸ் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.  அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தலைமை கழக நிர்வாகிகளின் அழைப்பு என்ற பெயரில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை அறிந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், பொதுக்குழுவைக் கூட்ட பொருளாளருக்குத் தான் அதிகாரம் உள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில் இபிஎஸ் ஆதரவாளர்கள் அழைப்பிதழ் அனுப்ப அதிகாரம் இல்லை என கூறியுள்ளனர்.

ஓபிஎஸ்-இன் ஒருங்கிணைப்பாளர் – பொருளாளர் அரசியல்:  

பாஜக சார்பில் குடியரசு தலைவராக போட்டியிடும் திரௌபதி முர்மு ஆதரவு கோரி நேற்று தமிழ்நாடு வந்திருந்தார். அதில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவருமே தனித்தனி அறைகளில் தான் தங்கி இருந்தனர். இருப்பினும், கூட, நிகழ்ச்சி அரங்கிற்கே செல்லாத ஓபிஎஸ் நட்சத்திர விடுதியில் இருந்து வெளியேறினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் எனக் கூறினார். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார். அதிமுகவின் இன்றைய நிலைக்கு ஓபிஎஸ் தான் காரணம். அவருக்கு அதிமுகவில் அதிகாரம் இல்லை எனக் கூறினார். ஆக மொத்தம், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-க்கு அதிகாரம் இல்லை இல்லை என இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதன் அடுத்தகட்டமாக, ஓபிஎஸ் அனுமதி இல்லாமலேயே, திட்டமிட்டபடி ஜூலை 11 ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இங்கு தான், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ்க்கு எதிராக ஒரு அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர். ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இல்லை என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிக்கொண்டிருக்க, அதிமுகவில் ஓபிஎஸ் செல்வாக்கை காட்ட, அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட ஓபிஎஸ்-க்கு தான் அதிகாரம் உள்ளது என கூறியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம். இதற்காக 2017ல் நடந்த ஒரு சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆம், அதிமுகவின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுகவும், இரட்டை இலை சின்னமும், அப்போது அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மற்றும் பொருளாளராக இருந்த ஓபிஎஸ்-க்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. 

அதிமுக – இரட்டை இலை சின்னம் முடக்கமா?:

அதன்படி, அதிமுக கட்சியும் இரட்டை இலை சின்னமும் தற்போது, ஓபிஎஸ் வசம் இருப்பதால், அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் ஓபிஎஸ்-க்கு தான் உள்ளது என கூறியுள்ளனர். இதனால், அதிமுக தலைமை கழக நிர்வாகிகளின் அழைப்பு என்று ஈபிஎஸ் ஆதரவாளர்கள் சொல்வதில் நியாயமில்லை எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், இந்த விவகாரத்தில், இன்னொரு விஷயமும் வெளிப்படுகிறது. தொடர்ந்து ஈபிஎஸ் தான் அதிமுகவின் ஒற்றைத் தலைமை, பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தான் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தினால், அதிமுக கட்சியையும், இரட்டை இலைச் சின்னத்தையும் முடக்கும் பணியில் ஈடுபடுவோம் என சொல்லாமல் சொல்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

மொத்தத்தில், அதிமுகவில் தற்போது நடக்கும் அரசியல், அதிகாரத்திற்கான போட்டியாக கூர் தீட்டப்பட்டுக்கொண்டே வருகிறது. இதில், அதிமுகவின் செயற்குழு பொதுக்குழுவை ஜூலை 11ல் கூட்டியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் ஈபிஎஸ்ஸூம், ஒற்றைத் தலைமை கருத்தை அடியோடு அழிக்க செயற்குழுவை கூட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும் போராடி வருகின்றன. இதனால், அடுத்த சில நாட்களுக்கு அதிகாரத்தின் போட்டி உச்சம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.